பாம்பு போல வளைந்து நெளிந்து ஆடிய ஆசிரியை அதிரடி ‘சஸ்பெண்டு’


ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சி வகுப்பில் பாம்பு நடனத்தை ஒருங்கிணைத்த ஆசிரியை ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார். மேலும் நடனமாடிய 2 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

இதில் ஏராளமான ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 2 ஆசிரியர்கள் மற்றும் 1 ஆசிரியை என 3 பேர் இடைவேளையின் போது பாம்பு போல வளைந்து நெளிந்து ‘நாசின்’ நடனமாடி மகிழ்ச்சியாக பொழுதை கழித்துள்ளனர்.

இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். அந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் நடனமாடிய வீடியோ வைரலானது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நடனத்தை ஒருங்கிணைத்த ஆசிரியை ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார். மேலும் நடனமாடிய 2 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் அசோக் ரோஷ்வால் கூறியதாவது:-

நடனம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் சில நடத்தை நெறிமுறைகள் உள்ளது. அதை பின்பற்ற வேண்டும்.

எனவே தான் நடனத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்திய ஆசிரியை ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார். மற்ற 2 ஆசிரியர்களும் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் விதிகளை பற்றி தெரிந்திருக்கவில்லை. இது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஆசிரியை மீதான ‘சஸ்பெண்டு’ நடவடிக்கைக்கு பல்வேறு அரசு துறையை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “பயிற்சி வகுப்பின் இடைவேளையின் போது ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக நடனமாடி உள்ளனர். இதில் என்ன தவறு இருக்கிறது? என்று அரசு ஊழியர், தனது சக ஊழியர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளக்கூடாதா? இதை ஏற்றுக்கொள்ள முடியாது” என கூறி உள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!