தாய்க்காக கட்டிய கோவிலில் மகனும் – பேரனும் அடக்கம்… திருச்சியில் நடந்த சோகம்..!


திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியை சேர்ந்தவர் ராஜராஜசோழன் (வயது 47). வக்கீலான இவர் கடந்த 23-ந் தேதி இரவு அவரது மகன் சேரலாதனுடன்( 12) மோட்டார் சைக்கிளில் திருவெறும்பூர் பகுதியில் சென்றார்.

பெல் கணேசாரவுண்டானா பகுதியில் செல்லும் போது அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோட்டார்சைக்கிள் மோதியதில் தந்தை, மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

உடனே அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜராஜசோழனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சேரலாதனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மறுநாள் அவனும் பரிதாபமாக உயிரிழந்தான்.
விபத்தில் தந்தை-மகன் பலியான சம்பவம் பொதுமக்கள், வக்கீல்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருவரின் உடல்களுக்கும் பொதுமக்கள், வக்கீல்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் தந்தை-மகன் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது-.

விபத்தில் பலியான வக்கீல் ராஜராஜசோழனின் தாய் அமுதா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து தாயின் நினைவாக ராஜராஜசோழன், அவரது சகோதரர்களுடன் இணைந்து தாய்க்கு கோவில் கட்ட முடிவு செய்தார். இதையடுத்து அவர்களுக்கு சொந்தமான பரம்பரை பரம்பரையாக உள்ள இடத்தில் ரூ.35 லட்சம் செலவில் தாய் அமுதாவின் நினைவாக கோவில் ஒன்றை கட்டினர். அந்த கோவிலில்தான் ராஜராஜசோழனின் தந்தை உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று அங்கு சிறப்பு வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்குவதை ராஜராஜசோழன் மற்றும் அவரது சகோதரர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் விபத்தில் ராஜராஜசோழன், அவரது மகன் சேரலாதன் பலியானதையடுத்து 2 பேரின் உடல்களையும் தாய் அமுதாவிற்காக கட்டப்பட்ட கோவிலில் அடக்கம் செய்ய ராஜராஜசோழனின் உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவில் வளாகத்தில் தனித்தனியாக 2 குழிகள் தோண்டப்பட்டு, செங்கல், சிமெண்டால் பக்கவாட்டு சுவர் கட்டினர். பின்னர் சித்தர்கள், ஆன்மீக குருக்கள் போன்றவர்களை அடக்கம் செய்வது போல் குழியில் விபூதி, சந்தனம், திரவிய பொடிகள், வில்வம், துளசி போன்றவற்றை நிரப்பி அடக்கம் செய்தனர். தாய்க்காக கட்டிய கோவிலில் மகனும், பேரனும் அடக்கம் செய்யப்பட்டது அப்பகுதி பொதுமக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

இதனிடையே தந்தை- மகன் பலியான விபத்து குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவெறும்பூர் கணேசாரவுண்டானா அருகே அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு அங்கு நடந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் பெல் மற்றும் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வரும் லாரிகள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்துக்களும் நிகழ்ந்து வருகிறது-. அது போல்தான் ராஜராஜசோழன், அவரது மகன் பலியாவதற்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி எமனாக அமைந்துவிட்டது. எனவே இனிமேல் இது போன்று விபத்துக்கள் நிகழாமல் இருக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!