சாப்பிட்டு கொண்டே கால்களுக்கு மீன் ‘ஸ்பா’… எங்கு தெரியுமா..?


சாப்பிட்டு கொண்டே பெடிகியூர் சிகிச்சை பெறும் வகையில் டூ-இன்-ஒன் வசதி கொண்ட நவீன ஓட்டல் வாடிக்கையாளர்களின் கவனம் ஈர்த்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளில் வாடிக்கையாளர்களின் உடலில் பல்வேறு பகுதிகளில் வலிகளை போக்க மசாஜ் செய்யும் ‘ஸ்பா’க்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அந்த உடல் பகுதிகள் தளர்வடைந்து களைப்பு நீங்கும்.

அவற்றில் கால்களுக்கு வழங்கப்படும் பெடிகியூர் முறையும் ஒன்று. இதில், கால்களை நீருக்குள் வைத்து, மீன்களை கொண்டு மெல்ல கடிக்க விட்டு மசாஜ் செய்த உணர்வை அளிக்கும் மீன் ‘ஸ்பா’க்களும் உள்ளன.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில நகரங்களில் பாக்டீரியா தொற்று ஏற்படும் என இதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. உடல்நல பாதிப்பு ஏற்படும் மற்றும் விலங்குகளுக்கு தீங்கு ஏற்படும் என பீட்டா அமைப்பும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஆனால், இந்தோனேசியாவில் விடுதி உரிமையாளரான இமாம் நூர் என்பவர் ஒருபடி மேலே சென்று இந்த பெடிகியூர் முறையுடன் ஜாவா பாரம்பரிய உணவையும் வழங்கி வருகிறார்.

இவர் திறந்தவெளி உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். அதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் நீரில் நீந்தி செல்கின்றன. அதன் நடுவில் மேசைகளை போட்டு வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்குகிறார். விடுதிக்கு வருபவர்களின் கால்களில் இறந்த செல்களை மீன்கள் கடித்து நீக்குகிறது. இது ஒரு சுக அனுபவம் என அன்னா விடியா என்ற வாடிக்கையாளர் கூறியுள்ளார்.

இதுபற்றி கூறும் நூர், எனது தந்தையின் அறிவுரையின் பேரில் உணவு விடுதியை அமைத்தேன். ஆரம்பத்தில் உள்ளூர் மக்களே வர தொடங்கினர். பின்னர் சுற்றுலா தலம் போன்று பல்வேறு நகர மக்களும் இங்கு வருகை தருகின்றனர் என கூறியுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!