மருமகள் கடத்திட்டு போனா.. கட்டிப்போட்டு சித்திரவதை செஞ்சாங்க.. மாமியார் கண்ணீர் பேட்டி..!


“கார் டிரைவருடன் என்னை கடத்திட்டு போனது என் மருமகள்தான்.. துப்பாக்கியை காட்டி என்னை மிரட்டி காரில் கடத்திட்டு போனாங்க.. ஒரு வீட்டில் என்னை கட்டிப்போட்டு சித்ரவதை செய்தாங்க” என்று மருமகள் மீது மாமியார் போலீசில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையை சேர்ந்தவர் பத்மினி. 70 வயதான இவருக்கு, செந்தில், ராஜு என, 2 மகன்கள் உள்ளனர். 2 மகன்களுக்கும் கல்யாணமாகி தனித்தனியே படப்பையில் வசிக்கின்றனர். ஆனால், சொத்து சம்பந்தமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது.

மறைந்த அதிமுக பிரமுகர் சுப்பராயனின் மனைவிதான் பத்மினி. இவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் 10க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன.
எப்ப பார்த்தாலும் மகன்கள் சொத்துக்காக சண்டை போடுவதை தாங்கி கொள்ள முடியாத பத்மினி, 3 நாளைக்கு முன்பு அயனாவரத்தில் உள்ள தன்னுடைய அக்கா சரஸ்வதி வீட்டில் தங்கி இருந்தார். பத்மினிக்கும் அவரது மருமகள் மேனகாவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2 நாளைக்கு முன்பு செந்தில் மனைவி மேனகா அந்த வீட்டிற்கு வந்தார்.. தன்னுடைய காரில் மாமியார் பத்மினியை ஏற்றி கடத்தி கொண்டு போய்விட்டார். அந்த காரில் ஒரு இளைஞரும் இருந்துள்ளார்.

இதை பார்த்த அங்கிருந்த உறவினர்கள் உடனடியாக அயனாவரம் போலீசில் புகார் செய்யவும், போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பத்மினியை மீட்கவும் நடவடிக்கையில் இறங்கினர். இதற்குள், பெரும்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மாமியாரை கடத்தி அலைக்கழித்துள்ளார் மேனகா.

இறுதியில், பத்மினியை திருநின்றவூர் அருகே தனது சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது போலீசாரின் காதுகளுக்கு எட்டியது. இதனிடையே வீட்டின் சாவியை கைப்பற்ற அயனாவரம் வீட்டுக்கு திரும்பவும் மேனகா வந்தபோதுதான், போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின்பேரில், விரைந்து சென்று ஒரு வீட்டுக்குள் கட்டிப் போடப்பட்டு பரிதாபமாக கிடந்த பத்மினியை மீட்டனர்.

“மருமகள் மேனகா, கார் டிரைவர் ராஜேஷ்கண்ணாவுடன் சேர்ந்து தன்னை கடத்தி சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி சொத்துக்களை அவரது பெயருக்கு மாற்றி எழுதி கையெழுத்து போடச்சொல்லி மிரட்டியதாக” கண்ணீருடன் சொன்னார்.

இதையடுத்து, மாமியாரை கடத்தி சென்ற மேனகாவையும் கைது செய்துள்ளனர். ரூ.4 கோடி சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றுவதற்காக மேனகா கடத்தி சென்றதும், இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் ராஜேஷ்கண்ணா என்ற இளைஞருக்கும் தொடர்பு உள்ளது என்பதும் தெரியவந்துள்ளதால் விசாரணை தொடர்கிறது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!