விரைவில் பாராளுமன்ற தேர்தல்… கோத்தபய ராஜபக்சே அதிரடி அறிவிப்பு


இலங்கை பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று கோத்தபய ராஜபக்சே கூறினார். 2 தமிழர்கள் உள்பட 16 பேர் அடங்கிய இடைக்கால மந்திரிசபைக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். கடந்த 18-ந் தேதி, அவர் அதிபராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார். அதனால், தன்னுடைய சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக கோத்தபய நியமித்தார்.

ரணில் மந்திரிசபை பதவி விலகியதால், நேற்று 16 பேர் கொண்ட இடைக்கால மந்திரிசபையை கோத்தபய ராஜபக்சே அமைத்தார். இந்த மந்திரிசபையில் 2 தமிழர்களும் இடம்பெற்றுள்ளனர். 16 பேருக்கும் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஒவ்வொருவருக்கும் இலாகாக்களையும் அவர் ஒதுக்கீடு செய்தார்.

அதன்படி, பிரதமர் ராஜபக்சேவுக்கு ராணுவம், நிதி ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கோத்தபய ராஜபக்சேவின் மற்றொரு அண்ணன் சாமல் ராஜபக்சேவுக்கு வர்த்தகம், உணவு பாதுகாப்பு ஆகிய இலாகாக்களும், பழம்பெரும் இடதுசாரி அரசியல்வாதி தினேஷ் குணவர்த்தனேவுக்கு வெளியுறவு இலாகாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மந்திரிசபையின் தலைவராக அதிபர் கோத்தபய இருந்தபோதிலும், அவர் எந்த அமைச்சகத்தையும் தன் பொறுப்பில் வைத்துக்கொள்ள முடியாது.

இணை மந்திரிகள், அடுத்த வாரம் நியமிக்கப்படுவார்கள் என்று கோத்தபய ராஜபக்சே கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

இலங்கை பாராளுமன்றத்துக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தேர்தல் நடத்தப்படும். அரசியல் சட்டம் எனக்கு அளித்த அதிகாரத்தின்படி, இதுகுறித்து மக்களுடன் ஆலோசனை நடத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை இருக்கிறது. இருப்பினும், பிப்ரவரி மாதத்துக்கு பிறகு பாராளுமன்றத்தை கலைக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது. எனவே, பிப்ரவரி மாதத்துக்கு பிறகு, பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.

225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் ராஜபக்சே கட்சிக்கு 96 எம்.பி.க்களின் ஆதரவுதான் உள்ளது. எனவே, மசோதாக்களை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும் என்று தெரிகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!