இலங்கை வரலாற்றில் முதல்முறையாக மாறுபட்ட வாக்குச் சீட்டு..!


இலங்கை அதிபர் தேர்தலில் தற்போது புதிய முறையில் வாக்களிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து இந்த தேர்தல் நடைபெறுகிறது.

இந்தியா உள்பட 13 சர்வதேச பார்வையாளர்கள் இந்த தேர்தலை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கை பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தய ராஜபக்சேவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தமிழர்கள் சார்பில் தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. அதுபோல் கருணா வரதராஜ பெருமாள், ராஜபக்சேவை ஆதரிக்கிறார். இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அதிபர் களத்தில் 35 வேட்பாளர்கள் இருப்பதால் வாக்களிக்கும் முறை மற்ற நாடுகளை காட்டிலும் சற்று வித்தியாசமாக உள்ளது.

வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் 26 அங்குல நீளத்திற்கு வாக்குச் சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் அச்சிடப்பட்டிருக்கிறது. சிங்கள மொழியின் அகரவரிசைப்படி பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது முதல் விருப்பமாக வாக்காளர்கள் யாரை தேர்வு செய்துள்ளனர் என்பது கணக்கிடப்படும். குறிப்பிட்ட வேட்பாளரை 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் விருப்பமாக தேர்வு செய்திருந்தால் அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

ஒரு வேளை 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை எந்த வேட்பாளரும் பெறவில்லை என்றால் இன்ஸ்டன்ட் ரன் ஆப் முறை பின்பற்றப்படும். இதில் முதல் இரு இடங்களை பிடித்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இவர்களை 2-வது, 3-வது விருப்பமாக எத்தனை பேர் தேர்வு செய்துள்ளனர் என்பது கணக்கில் எடுத்து அவை இருவரின் வாக்குகளுடன் சேர்த்து அதில் யார் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவர்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!