ஜனாதிபதி தேர்தலில் 3 மணி நேரத்தில் 30 சதவீத வாக்குப்பதிவு


இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் 3 மணி நேரத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தன.

இலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் 9-ந்தேதி முடிகிறது. இதையொட்டி, அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வாக்களித்துவருகின்றனர்.


மொத்தம், 35 வேட்பாளர்கள் அதிபர் பதவிக்கான களத்தில் உள்ளனர். எனினும், முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா (52) ஆகியோருக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது.

முன்னாள் அதிபர், ராஜபக்சே, வேட்பாளர்கள் கோத்தபய ராஜபக்சே, சஜித் பிரேமதாசா ஆகியோர் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஓட்டு போட்டனர். இதேபோல் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குகளை பதிவு செய்தனர்.


காலை 10 மணி நிலவரப்படி 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த தேர்தலில் 80 முதல் 85 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகலாம் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 5 மணிக்கு வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிப்பது உறுதி செய்யப்படும். தேர்தலையொட்டி இலங்கை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!