பாலியல் குற்றவாளியை ஏன் கூப்பிட்டீங்க… கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்


பாலசந்தரின் சிலை திறப்பு விழாவுக்கு வைரமுத்துவை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் பிரபலமான மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள், தங்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல தொடங்கினர். பாடல் ஆசிரியர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்தார் பாடகி சின்மயி. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பியது. சிலர் அவரை அவதூறாக பேசினர். பலரும் ஆதரித்தனர்.

தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், தனது அலுவலகத்தில் பாலசந்தரின் சிலையை திறந்துள்ளார். இந்த விழாவில் ரஜினிகாந்த், மணிரத்னம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களுடன் வைரமுத்துவும் பங்கேற்றார். பாலியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்ட வரை எதற்காக இந்த விழாவிற்கு அழைத்தார்கள் என சின்மயி கமலை மறைமுகமாக சாடி உள்ளார்.

இதுப்பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் கூறியிருப்பதாவது:- நான் இங்கே குறிப்பிடுவது வைரமுத்துவை. ஒரு மனிதன் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு ஆளானால் அவனது வாழ்க்கையே அழிந்துவிடும். முகத்தை வெளியே கூட தலைக்காட்ட முடியாது. அப்படிப்பட்ட குற்றவாளியான வைரமுத்து தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல திமுக நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் மற்றும் தொழில் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு எதுவும் நடக்கவில்லை.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணான நான் தடை செய்யப்பட்டேன். இது தான் தமிழ் சினிமாவில் உள்ள பெரியவர்களால் எனக்கு வழங்கப்பட்ட நீதி’ இவ்வாறு பதிவிட்டுள்ளார். மேலும் டுவிட்டரில், ‘’பாலியல் குற்றவாளிகள் பொதுமேடையில் தங்கள் இமேஜை எப்படி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். இவர்களில் சில அரசியல்வாதிகளும் அடக்கம். இவர்களை நினைத்தால் பயமாக உள்ளது’’ என டுவிட்டரில் கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!