என்னுடைய ஆசைக்காகக் கிணற்றுக்குள் இறங்க மாட்டாயா..? மெர்சி கேட்ட இறுதி வார்த்தை..!


சென்னை அடுத்த ஆவடி அருகில் உள்ள பட்டாபிராம் நவஜீவன் நகரைச் சேர்ந்தவர் தாஸ். இவரின் மனைவி பியூலா. இந்தத் தம்பதியின் மூத்த மகன் அப்பு (24). இன்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறார். பியூலாவின் சகோதரர் தாமஸ். இவர், திருவள்ளூர் மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மகள் மெர்சி என்கிற ஸ்டெபி (21). பி.காம் படித்துவிட்டு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்த்துவந்தார்.

அப்புவுக்கும் மெர்சிக்கும் இடையே திருமணம் செய்து வைப்பதற்கு இருவீட்டிலும் முடிவு செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் 2-ம் தேதி நிச்சயதார்த்தமும் நடந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த 4-ம் தேதி முத்தாபுதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டிகை பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் செல்ஃபி எடுக்க முயன்றபோது மெர்சி தவறி விழுந்து இறந்துவிட்டதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மெர்சியைக் காப்பாற்ற அப்புவும் கிணற்றுக்குள் குதித்ததாகவும் தகவல் வெளியானது.

`உண்மையில் என்ன நடந்தது?’ என்று அப்புவைச் சந்தித்துப் பேசினோம். மெர்சி இறந்த துக்கத்தில் அவரால் பேச முடியவில்லை.

அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு அவரைப் பேச வைத்தோம். “நான் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அந்தவேலையை விட்டுவிட்டு தற்போது வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். சிறுவயது முதல் மெர்சியை எனக்குத் தெரியும். நானும் அவளும் சேர்ந்து விளையாடியிருக்கிறோம். பெரியவர்களானபிறகு எங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்குப் பிறகு உரிமையோடு என்னிடம் மெர்சி பழகுவாள். கடந்த 4-ம் தேதி நான் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது, எனக்கு மெர்சி போன் செய்தாள். ஆனால் நான் போனை எடுக்கவில்லை. அதனால் என்னுடைய தம்பியின் செல்போன் மூலம் என்னிடம் பேசினார். அப்போது வீட்டுக்கு வருகிறேன் என்று கூறினாள். அதற்கு நானும் சம்மதித்தேன். என்னுடைய அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாததால் அவர், மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.

வீட்டுக்கு வந்த மெர்சி, `வெளியில் செல்லலாம்’ என்று கூறினார். `எங்கே செல்லலாம்?’ என்று அவளிடம் நான் கேட்டேன். அதற்கு அவள், `பிகில் படத்துக்குச் செல்லலாம்’ என்று கூறினாள். அதன்பிறகு, `அத்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் படத்துக்குச் செல்ல வேண்டாம்’ என்றாள். இதையடுத்து மெர்சியை பைக்கில் அழைத்துக்கொண்டு வெளியில் சென்றேன். நெமிலிச்சேரி பைபாஸ் சாலை வழியாக பைக்கில் சென்றுகொண்டிருந்தோம். அப்போதுதான் மெர்சி, `நாம் இருவரும் இந்த வயலில் போட்டோ எடுக்கலாம்’ என்று கூறினாள். உடனே இருவரும் பைபாஸ் சாலையை விட்டு கண்டிகை பகுதியில் உள்ள வயலுக்கு பைக்கில் சென்றோம். அங்குதான் அந்த விவசாயக் கிணறு இருந்தது.

கிணற்றுக்குள் இறங்க படியும் இருந்தது. உடனே கிணற்றுக்குள் இறங்கி, தண்ணீரை காலால் தொடுவோம் என்று மெர்சி கூறினாள். உடனே நான், `எனக்கு நீச்சல் அவ்வளவாகத் தெரியாது. வேண்டாம் பாப்பா (மெர்சி)’ என்று கூறினேன். அதற்கு அவள், `இந்தக் காலத்தில் லவ்வருக்காக எதையும் செய்கிறார்கள். ஆனால் நீ என்னுடைய ஆசைக்காகக் கிணற்றுக்குள் இறங்க மாட்டாயா?’ என்று கேட்டாள்.

என்னுடைய பாப்பாவுக்காகக் கிணற்றுக்குள் முதலில் நான் இறங்கினேன். அதன்பிறகு அவள் இறங்கினாள். நான் 5-வது படி வரை இறங்கியிருந்தேன். பாப்பா, 3-வது படியிலிருந்து என்னைப்பார்த்து சிரித்தபடியே 4-வது படியில் காலை வைத்தாள். அப்போது அவரின் கால் தவறியது. அதைப்பார்த்த நான் அவளைப் பிடிக்க முயன்றேன். என் மீது மெர்சி விழுந்தாள். இதனால் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கினோம்.

கிணற்றின் அடிவரை சென்ற நான், தண்ணீருக்குள் மெர்சியைத் தேடினேன். ஆனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலே வந்த நான், `காப்பாற்றுங்கள்’ என்று கத்தினேன். என் சத்தம் கேட்டு தாத்தா ஒருவர் அங்கு வந்தார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த என்னைப்பார்த்த அவர், அருகில் கிடந்த டியூப் ஒன்றை படிவழியாக இறங்கிக் கொடுத்தார். அதைப்பிடித்து மேலே வந்தேன். தண்ணீருக்குள் மூழ்கியதால் எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் தாத்தாவிடம் மெர்சி கிணற்றுக்குள் விழுந்ததைக் கூறினேன். உடனே அவர், எனக்கும் நீச்சல் தெரியாதே என்று கூறியபடி உதவிக்காக மெயின் ரோட்டுக்கு ஓடிச் சென்றார். வெளியில் வந்த நான் மயங்கிவிட்டேன்” என்றார் கண்ணீர்மல்க.

அப்பு இந்தக் காலத்தில் லவ்வருக்காக எதையும் செய்கிறார்கள். ஆனால் நீ என்னுடைய ஆசைக்காகக் கிணற்றுக்குள் இறங்க மாட்டாயா என்று கேட்டாள். என்னுடைய பாப்பாவுக்காக கிணற்றுக்குள் முதலில் நான் இறங்கினேன்.

மெர்சி, அப்பு ஆகியோரின் குடும்ப நண்பரான வழக்கறிஞர் டென்னி நம்மிடம், “கிணற்றின் சுற்றுச்சுவரில் நின்றபடி செல்ஃபி எடுத்ததால் தவறிவிழுந்து புதுப்பெண் இறந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அதில் உண்மையில்லை. செல்ஃபி எடுத்திருந்தால் நிச்சயம் இருவரின் செல்போன் ஒன்று கிணற்றுக்குள் விழுந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், சம்பவ இடத்தில் கிணற்றைவிட்டு தூரமாக இருவரின் செல்போன்கள், காலணிகள் மற்றும் உடைமைகள் இருந்தன. மேலும், அப்புவின் பைக்கும் கிணற்றின் அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தபோது கிணற்றுக்குள் இறங்கியபோதுதான் விபரீத சம்பவம் நடந்ததாகவும் செல்ஃபி எடுக்கவில்லை என்பதையும் கூறினார். மழையின் காரணமாக கிணற்றுக்குள் இருந்த படியில் பாசி பிடித்திருந்துள்ளது. இதனால்தான் 4-வது படியில் மெர்சி காலை வைக்கும்போது தவறி விழுந்துள்ளார். அவரைக்காப்பாற்ற அப்பு முயன்றுள்ளார். இதனால்தான் இருவரும் ஒன்றாகவே தண்ணீருக்குள் விழுந்துள்ளனர்.

ஆனால், செல்ஃபி எடுத்ததால்தான் கிணற்றுக்குள் விழுந்ததாக தவறான செய்திகள் வெளியாகி சோகத்தில் இருக்கும் குடும்பத்துக்கு மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை பெற்ற அப்புவிடம் இதுவரை போலீஸார், `என்ன நடந்தது?’ என்று விசாரிக்கக்கூடவில்லை. அப்படியிருக்கும்போது செல்ஃபி எனத் தவறான தகவல்களை யார் பரப்பினார்கள் என்று தெரியவில்லை.

இவர்கள் இருவருக்கும் முதலில் ஜனவரி மாதத்தில் திருமணம் நடத்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், மெர்சி வீட்டில் வருகிற மே மாதம் திருமணம் நடத்தலாம் என்று கூறியுள்ளனர். திருமணத்துக்கான ஏற்பாடுகளை இருவீட்டினரும் செய்துவந்த நேரத்தில் இப்படியொரு சோகச் சம்பவம் நடந்துள்ளது.

இந்தத் துயரத்திலிருந்து அப்பு மற்றும் அவரின் குடும்பம், மெர்சியின் குடும்பத்தினர் மீண்டுவர நீண்டகாலமாகும். மெர்சி, ரொம்பவே தைரியமான பெண். சர்ச்சில் அழகாகப் பாடுவார். இனிமேல் அந்த இனிமையான குரலை சர்ச்சில் கேட்க முடியாது” என்றார் வேதனையுடன்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!