பக்கத்து வீட்டுக்காரரின் மூடநம்பிக்கையால் காதல் மனைவியை பறி கொடுத்த கணவன்..!


தேனி மாவட்டம் சருத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி சதீஷ்குமார் – கிருஷ்ணவேணி. இது ஒரு காதல் திருமணம்.. கிருஷ்ணவேணி சொந்தக்கார பெண்தான்.. இருந்தாலும் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால், அதையும் மீறி கல்யாணம் செய்து கொண்டார் சதீஷ்குமார். இவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

தேனி ஓடை தெருவில் இவர்கள் இப்போது குடியிருக்கிறார்கள். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் சந்திரனுக்கு இவர்களை பார்த்தாலே ஆகாது.. எப்ப பார்த்தாலும் எதையாவது சொல்லி சண்டைக்கு வந்துவிடுவார்..

இப்படித்தான் சம்பவத்தன்று கிருஷ்ணவேணி தன் வீட்டு வாசலில் உட்கார்ந்து தலையை வாரிக் கொண்டிருந்தார். பொதுவாக சந்திரன் எப்பவுமே சகுனம் பார்ப்பாராம்.. அந்த நேரம் பார்த்து சந்திரன் வீட்டிலிருந்து வெளியே வந்தார்.. கிருஷ்ணவேணியிடம், நான் வீட்டில் இருந்து கிளம்பி போற நேரத்துலதான், அபசகுணமா இப்படி தலையை விரிச்சு வெச்சுக்கிட்டு சீவணுமா? என்று கேட்டுள்ளார்.

“என் வீட்டு வாசப்படியில, என் தலையை, நான் சீவுனா உங்களுக்கென்ன” என்று கிருஷ்ணவேணி கேட்டுள்ளார். இதனால் டென்ஷன் ஆன சந்திரன், படக்கென ஆபாசமாக கிருண்ஷவேணியை பேசிவிட்டார். இது இரு தரப்புக்கும் தகராறாக வெடித்தது.

கோபத்தின் உச்சிக்கு போய்விட்ட சந்திரன், கிருஷ்ணவேணியின் கையை பிடித்து தரதரவென இழுத்து போட்டு தாக்க ஆரம்பித்துவிட்டார். இந்த கூச்சல், சண்டையினால் அக்கம் பக்கம் வீட்டினர் திரண்டு வந்துவிட்டனர். சந்திரனை கடுமையாக எச்சரிக்க ஆரம்பித்ததும், அவர்களிடம் தாக்கு பிடிக்க முடியாமல் அங்கிருந்து விருட்டென கிளம்பி போய்விட்டார்.

சந்திரன் அடித்ததில் கிருஷ்ணவேணிக்கு உடலில் காயம் ஏற்பட்டது. உடனே தன் கணவனுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லி கதறி அழுதார். அதற்கு சதீஷ்குமார் “உடனே கிளம்பி வருகிறேன் இரு” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் சந்திரன் தன்னை அசிங்க அசிங்கமாக பேசியது, எல்லார் முன்னாடியும் தரதரவென இழுத்து போட்டு அடித்தது என இந்த அவமானம் தாங்காமல் கிருஷ்ணவேணி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் சொல்லப்பட, அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, தற்கொலைக்கு தூண்டியதாக சந்திரனை கைது செய்தனர்.

மூட நம்பிக்கைக்கு ஒரு அளவில்லையா என்றும், தான் வீட்டு வாசலில் தலை சீவிக் கொண்டிருந்த பெண்ணை ஒரு நபர் தாக்கியதாலும், அதனால் ஏற்பட்ட விபரீதத்தையும் நினைத்து அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!