பணக் கிலுகிலுப்பை காட்டி அ.தி.மு.க. வெற்றி பெற்றது – மு.க.ஸ்டாலின்

இடைத்தேர்தலில் பணம் என்ற கிலுகிலுப்பை காட்டி அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரமேஷ் இல்லத் திருமண விழா சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தந்தை பெரியார் கண்ட கனவின் அடிப்படையில் இது சீர்திருத்த, சுயமரியாதை, தமிழ் திருமணமாக நடந்துள்ளது. சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் தந்தது தி.மு.க. அரசுதான்.
நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வர காரணமாக இருந்தது தி.மு.க. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் படி 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி தமிழ் மாநிலம் என்ற உறுதியை பெற்றோம். ஆனால் மெட்ராஸ் மாகாணம் என்று தான் பெயர் இருந்தது.

அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ்நாடு என்ற பெயரை கொண்டு வந்தார். அதுபோல் மெட்ராஸ் என்று இருந்த பெயரை சென்னை மாநகர் என்று கலைஞர் மாற்றினார். அந்த மாநகரில் 2 முறை நான் மேயராக இருந்தேன்.

ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக உழைக்கும் கட்சி தி.மு.க. தமிழகத்தில் தற்போது நடைபெறுவது எடப்பாடி ஆட்சி அல்ல மத்திய பா.ஜனதா அரசின் எடுபிடி ஆட்சி. இந்த ஆட்சியை பற்றி பேசினால் முதல்-அமைச்சருக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

2 தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்று, பண நாயகம் வென்றிருக்கிறது. இங்கு பணம் என்ற கிலுகிலுப்பையை காட்டி அ.தி. மு.க. வெற்றி பெற்றுள்ளது. பணநாயகத்தை நம்பி அ.தி.மு.க. பெற்ற இந்த வெற்றி தொடராது. நடை பெறுகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் அது உள்ளாட்சி தேர்தல் என்றாலும், பொது தேர்தல் என்றாலும் மிகப்பெரிய வெற்றிபெற உழைக்க வேண்டும். அதற்கு அனைவரும் நல் ஆதரவை தர வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!