செயலிழந்த கிட்னி.. திடீர் மாரடைப்பு… உயிருக்குப் போராடும் நவாஸ் ஷெரிஃப்..!


பாகிஸ்தான் நாட்டின் மூன்று முறை பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரிஃப். இவர் அந்நாட்டில் உள்ள முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராகவும் உள்ளார். நவாஸ் பிரதமராகப் பதவிவகித்த காலத்தில் பல்வேறு ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு செய்ததாகக் கடந்த 2017-ம் ஆண்டு இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவை அனைத்தும் உறுதி செய்யப்பட்டு 2018-ம் ஆண்டு நவாஸ் கைது செய்து செய்யப்பட்டார்.

இவர் மீது சுமத்தப்பட்டுள்ள மூன்று ஊழல் வழக்குகளில் இவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டு லாகூரில் உள்ள மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் இரவு உணவு உண்ட பிறகு, நவாஸுக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்துள்ளது. அதன் பிறகு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நவாஸ் தற்போது வரை அங்கேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

‘என் தந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது மயக்கம் அடைந்துவிட்டார். அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்த பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரது உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதனால் அவர் உண்ட உணவில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகமாக உள்ளது” என்று நவாஸ் ஷெரிஃப்பின் மகன் உசேன் ஷெரிஃப் கூறியிருந்தார். இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நவாஸுக்கு அங்கேயே மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. “லாகூரில் உள்ள மருத்துவமனையில் தற்போது நவாஸ் ஷெரிஃப் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது, அதே நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் நவாஸின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அவரின் கிட்னியும் மெதுவாகச் செயலிழந்து வருகிறது. இருந்தும் அவர் தீவிர கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்” என நவாஸ் ஷெரிஃபின் தனிப்பட்ட மருத்துவர் ஆதன் கான் தகவல் தெரிவித்துள்ளார்.

நவாஸின் உடல்நிலையைக் கருதி அவருக்கு இரண்டு மாதங்கள் பெயில் வழங்கப்பட்டுள்ளது. அதுவரை மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெறவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பழிவாங்கல் நடவடிக்கையினால்தான் நவாஸின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்த விஷயம் அனைவருக்கும் தெரியட்டும். நவாஸுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு இம்ரான் கானும் அவரது அரசும்தான் முழு காரணம்” என முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மூத்த தலைவர் அஹ்சன் இக்பால் குற்றம்சாட்டியுள்ளார்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!