நீங்களே உருவாக்கினீர்கள் நீங்களே கொன்றிருக்கிறீர்கள் – அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி..!


நீங்கள் உருவாக்கிய ஐ.எஸ். அமைப்பின் தலைவனை நீங்களே கொன்றிருக்கிறீர்கள் என அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈரான் கருத்து தெரிவித்துள்ளது.

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றுதான் ஐ.எஸ் எனப்படும் (இஸ்லாமிக் ஸ்டேட்) பயங்கரவாத அமைப்பு.

ஈராக் நாட்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு படிப்படியாக சிரியாவிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது. தாங்கள் கைப்பற்றும் நகரங்களில் உள்ள கட்டளைக்கு அடிபணிய மறுப்பு தெரிவித்த பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானவர்களை கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

மேலும் அழகிய இளம்பெண்களை கடத்திச் சென்று தங்களது பாலியல் தேவைக்கும் பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

சிரியாவின் மோசூல் நகரை தலைமையாக கொண்டு இஸ்லாமிய அரசை நிறுவி அதன் மன்னனாக அபுபக்கர் அல்-பக்தாதி தன்னை 29-6-2014 அன்று பிரகடனப்படுத்தி கொண்டான்.

இந்த பயங்கரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா, ரஷியா, ஈராக், சிரியா உள்பட பல நாடுகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தினர்.

இதற்கிடையில், பல ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சிரியாவின் இட்லிப் பகுதியில் அமெரிக்காவின் அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். அமைப்பின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டுவிட்டதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில், ஐ.எஸ். தலைவனை அமெரிக்கப்படைகள் கொன்றுவிட்டதாக வெளியான தகவலுக்கு ஈரான் கருத்து தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி முகமது ஜாவத் அசாரி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ‘ ஐ.எஸ். அமைப்பின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டது ஒன்றும் மிகப்பெரிய விஷயம் இல்லை. நீங்கள் உருவாக்கியதை நீங்களே கொன்றிருக்கிறீர்கள்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் அரசின் செய்திதொடர்பாளர் அலி ரபிய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ‘ பக்தாதி கொல்லப்பட்டு விட்டாலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கான பாதை இன்னும் அழிக்கப்படவில்லை. அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகும் அந்த பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.

அதே போல் தான் ஐ.எஸ். அமைப்பும். வெடி குண்டுகளாலும், ஆயுதங்களாலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை ஒழிக்கமுடியாது. அந்த அமைப்பு இன்னும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது’ என அவர் தெரிவித்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!