40 பயணிகளின் உயிரை காப்பாற்றி இறந்த ஓட்டுநர்! பஸ் ஓட்டும் போது நடந்த சோகம்..!


திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த பூவாளூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் திருக்குமரன் அரசு பஸ் டிரைவரான இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும், 1 மகனும் உள்ளனர். வழக்கம் போல் திருக்குமரன் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

லால்குடியை அடுத்த மாந்துறையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்ற அவர், அங்கிருந்து மதியம் 2 மணிக்கு திண்ணியம் வரை செல்லும் பஸ்சை ஓட்டிச்சென்றார். அந்த பஸ்சில் கண்டக்டராக நாகராஜ் இருந்தார். பின்னர் திண்ணியத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, திருச்சி நோக்கி அந்த பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். லால்குடியை அடுத்த சிறுமயங்குடியை தாண்டி பஸ் சென்றபோது திருக்குமரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பஸ்சை சாலையோரமாக நிறுத்திவிட்டு, கண்டக்டரிடம் ‘என்னால் பஸ்சை இயக்க முடியவில்லை, நெஞ்சுவலி மற்றும் தலை சுற்றல் ஏற்படுகிறது’என்று கூறினார்.

இதையடுத்து அவரை, கண்டக்டர் நாகராஜ் உடனடியாக அருகே உள்ள சிறுமயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். திருக்குமரனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரை உடனடியாக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். இதையடுத்து கார் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து கண்டக்டர் நாகராஜ் லால்குடி போக்குவரத்து கழக பணிமனை கிளை மேலாளர் பூபதிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த கிளை மேலாளர் மருத்துவமனையில் டாக்டரிடம் இதுகுறித்து கேட்டறிந்தார். இது தொடர்பாக திருக்குமரனின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லால்குடியை அடுத்த சிறுமயங்குடி பாதையின் இருபுறமும் ஓடும் ஆற்றில் பேருந்து இறங்கியிருந்தால் பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் 40 பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த அரசு பேருந்து டிரைவர் திருக்குமரனுக்கு வருத்தங்களுடன் நன்றி கண்ணீர் செலுத்தினர் அந்த பகுதி மக்கள்.-Source: nakkheeran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!