பிகில் திரைப்படம் எப்படி இருக்கு? நிச்சயம் விசில் போட வைக்கும்.!


நடிகர் விஜய்
நடிகை நயன்தாரா
இயக்குனர் அட்லி
இசை ஏ.ஆர்.ரகுமான்
ஓளிப்பதிவு ஜி.கே.விஷ்ணு

சென்னையில் மையப்பகுதியில் அமைந்துள்ள கல்லூரியை இடித்துவிட்டு, அரக்கோணம் அருகில் புதிதாக கல்லூரி கட்டி தருவதாக அமைச்சர் கூறுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள், போராட்டத்தில் குதிக்கின்றனர். போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, அமைச்சர் தனது அடியாட்களை ஏவிவிட்டு அடித்து துறத்துகிறார். இதையடுத்து விஜய்(மைக்கேல்) வசிக்கும் பகுதியில் மாணவர்கள் தஞ்சமடைகின்றனர். மாணவர்களை தேடி அப்பகுதிக்கு வரும் அடியாட்களை அடித்து துவம்சம் செய்கிறார் விஜய்.


விஜயின் இந்த நடவடிக்கையால் கல்லூரியை இடிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார் அமைச்சர். இது ஒரு புறம் இருக்க, நயன்தாரவுக்கு அவரது தந்தை திருஞானசம்பந்தம் கல்யாண ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் தான் விஜயை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக்கூறி கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார் நயன்தாரா.

இந்த சூழலில் விஜயின் நண்பரும், தமிழ்நாடு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளருமான கதிரை, விஜயின் எதிரியான டேனியல் பாலாஜி கத்தியால் கழுத்தில் குத்தி விடுகிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில், கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பயிற்சியாளல் இல்லாததால் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா அடங்கிய பெண்கள் அணியினர் முக்கியமான போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகிறது.

ஆனால் அவர்களை எப்படியாவது போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என முடிவெடுக்கும் கதிர், விஜயை பயிற்சியாளராக செல்லுமாறு அறிவுறுத்துகிறார். ரவுடியை எப்படி பயிற்சியாளராக ஆக்க முடியும் என அணியின் மேலாளர் கதிரிடம் கேட்க, அப்போது தான் பிகிலின் பிளாஷ்பேக்கை சொல்கிறார் கதிர்.


ராயபுரத்தையே தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ராயப்பனின் தந்தை விஜய்) மகன் தான் பிகில். அப்பகுதி மக்களுக்கு இடையூராக பல்வேறு வேலைகளை செய்யும் டேனியல் பாலாஜியின் தந்தையை ராயப்பன் தட்டிக்கேட்கிறார். இதனால் இருவருக்கும் பகை உண்டாகிறது. ராயப்பனை கொல்ல சதித்திட்டம் தீட்டு வருகிறார் டேனியல் பாலாஜியின் தந்தை. தன்னைபோல் தனது மகனும் ரவுடி ஆகிவிடக்கூடாது என என்னும் ராயப்பன், பிகிலை கால்பந்தாட்ட வீரனாக மாற்ற வேண்டும் என தீர்க்கமாக உள்ளார்.

இந்த விளையாட்டால தான் நம் அடையாளங்கள் மாறும் என மகனுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தி படிப்படியாக முன்னேறும் பிகிலுக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. இதற்காக அவர் டெல்லி புறப்படும் வேளையில், டேனியல் பாலாஜியின் தந்தை ராயப்பனை கொன்றுவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பிகில் டேனியல் பாலாஜியின் தந்தையை கொன்றுவிடுகிறார். தந்தை இறந்ததால், ராயபுர மக்களை பாதுகாக்க வேண்டும் என பிகில் முடிவெடுக்கிறார்.

இதனால் பிகில் கால்பந்து விளையாட முடியாமல் போகிறது. பின்னர் மைக்கிலாக வாழ்ந்து வருவதாக கூறும் கதிரின் ஆசைக்கிணங்க விஜய் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். விஜய் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது கால்பந்து வீராங்கனைகளுக்கு பிடிக்கவில்லை. ரவுடி எப்படி பயிற்சியாளர் ஆக முடியும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்திய கால்பந்து அசோசியேசன் தலைவராக இருக்கும் ஜாக்கி ஷெராப், விஜய் பயிற்சி அளிக்கும் தமிழ்நாட்டு பெண்கள் அணியினருக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறார். இதனை மீறி பெண்கள் அணி வென்றதா? கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை விஜய் நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை

விஜய், ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு கதாபாத்திரங்களுக்கு ஏற்றார்போல் உடல் மொழி, நடை என வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கும் விஜய், செண்டிமெண்ட் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தடம் பதிக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு முன்னர் ரெயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சண்டை காட்சி வேற லெவல்.


பெண்கள் அணியின் பிசியோதெரபிஸ்டாக வரும் நயன்தாரா, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். மேலும் டேனியல் பாலாஜியும், ஜாக்கி ஷெராப்பும் கொடூரமான வில்லன்களாக வந்து மிரட்டுகிறார்கள். கால்பந்தாட்ட வீராங்கனைகளாக வரும் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா என ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். யோகிபாபு, விவேக், கதிர், ஆனந்தராஜ், சவுந்தரராஜா என அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

அட்லீ, நடிகர் விஜயை போல், கால்பந்து பெண்களுக்கும் இந்த படத்துல முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம் சிறப்பு. செண்டிமெண்ட், ஆக்‌ஷன், ரொமான்ஸ் போன்ற கமர்ஷியல் அம்சங்களுக்கு படத்தில் பஞ்சமில்லை. விஜய்யின் கதாபாத்திரத்தை செதுக்கி இருக்கிறார் அட்லீ. தந்தை ராயப்பன் கதாபாத்திரம் 4 சீன் வந்தாலும் நச்சுனு இருக்கு. லாஜிக் மீறல்களை சற்று குறைத்திருக்களாம். குறிப்பாக கதிரின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சில மணிநேரங்களில் அவர் பேசுவது போன்ற இடங்களை கவனித்திருக்களாம்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் ஏ ஆர். ரகுமான், பாடல்கள் ஏற்கனவே ஹிட்டான நிலையில், பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக விஜய் வர்ற சீன்ல சும்மா தியேட்டரை அதிர வைத்துள்ளார். ஜி.கே.விஷ்னுவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பிகில்’ விசில் போட வைக்கும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!