பசுமாட்டின் வயிற்றில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த டாக்டர்கள்..!


அறுவை சிகிச்சை மூலம் மாட்டின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக்கை வெற்றிகரமாக அகற்றிய டாக்டர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான பசுமாட்டின் வயிற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் பசுமாட்டின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர்.

தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழக சிகிச்சையியல் துறை இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் தலைமையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்பு மாடு நல்ல உடல் நலத்துடன் உள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டால் மண்ணுக்கு மட்டுமல்ல, வாய் பேச இயலாத உயிரினங்களுக்கும் எந்த அளவு ஆபத்து ஏற்படுகிறது என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவக்குழுவினருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.

அப்போது கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச்செயலாளர் க.சண்முகம், கால்நடை பராமரிப்புத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் கே.கோபால், தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் பா.டென்சிங் ஞானராஜ் மற்றும் மாட்டின் உரிமையாளர் முனிரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!