சிறையில் 28-ந்தேதி சசிகலாவை சந்திக்க போகும் தினகரன்..!


சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து நின்ற 58 வேட்பாளர்களில் 57 பேரை அவர் டெபாசிட் இழக்கச்செய்தார். இந்த வெற்றி மூலம் இடைத்தேர்தல் வரலாற்றில் டி.டி.வி.தினகரன் புதிய சாதனையை படைத்துள்ளார். டி.டி.வி.தினகரனின் இமாலய வெற்றி அவருடைய ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி.டி.வி.தினகரனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவருடைய ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து நேற்று சென்னை அடையாறில் உள்ள அவருடைய இல்லத்தின் முன்பு குவிந்த வண்ணம் இருந்தனர். உற்சாகத்தில் இருந்த அவருடைய ஆதரவாளர்கள் வாழ்த்து கோஷங்களையும் எழுப்பினார்கள்.

அதேசமயத்தில் தங்க தமிழ்ச்செல்வன், பாப்புலர் முத்தையா, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளை மட்டும் டி.டி.வி.தினகரன் நேற்று சந்தித்தார்.


மகத்தான வெற்றியை தேடி கொடுத்த ஆர்.கே.நகர் மக்களுக்கு டி.டி.வி.தினகரன் நேரடியாக சென்று நன்றி தெரிவிக்க உள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது சென்றதுபோல வீதி, வீதியாக சென்று அவர் நன்றி கூற உள்ளார். இதற்கான அனுமதி பெற்று அவர் நடத்துவார் என்று தெரிகிறது. இதேபோல பயண திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே பெங்களூரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை 28-ந்தேதி (நாளை மறுதினம்) டி.டி.வி.தினகரன் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தேர்தல் ஆணையம் வழங்கிய சான்றிதழையும் அவரிடம் காண்பித்து வாழ்த்து பெற உள்ளார்.

தேர்தல் வெற்றிக்கு பின் நிகழ உள்ள இந்த முதல் சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் டி.டி.வி.தினகரன் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!