வெங்கடேசனுக்கு ஜாமீன் மறுப்பு…. வசூல்ராஜா எம்பிபிஎஸ் பட பாணியில் இருக்கு!


நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யாவுக்கு மதுரை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மாணவரின் வயது மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கியதாக கூறிய நீதிபதி, உதித்சூரியன் அப்பா வெங்கடேசனுக்கு ஜாமீன் மறுத்துள்ளார். இந்த வழக்கு வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இருந்து திட்டம் தீட்டப்பட்டதுபோல் இருப்பதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவப்படிப்பில் சேர்ந்த சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவரையும், அதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனையும் போலீசார் கைது செய்தனர். 2 பேரையும் மதுரையிலும் அடைத்தனர்.

இந்த குற்றத்தில் வெங்கடேசன் மீதுதான் முழுக்க முழுக்க தவறு இருந்ததாகவே வெளிப்பட்டது. தன் மகனுக்கு இந்த ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து எதுவுமே தெரியாது என்றும் வெங்கடேசன் ஏற்கனவே சொல்லி இருந்தார். இந்நிலையில், தனக்கு ஆள் மாறாட்ட விவகாரத்தில் தொடர்பு இல்லாததால், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கைதாவதற்கு முன்பே உதித்சூர்யா மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 3-ந்தேதி நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது உதித்சூர்யா கைது செய்யப்பட்டுள்ளதால் முன் ஜாமீன் மனுவை, ஜாமீன் மனுவாக மாற்றி திரும்பவும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படியே ஜாமீன் கோரிய வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விசாரணையும் நேற்று நடந்தது. அப்போது, உதித் சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கினால், மற்றவர்களுக்கும் ஜாமீன் வழங்க நேரிடும். இதனால் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான விசாரணை பாதிக்கப்படும். எனவே, மாணவர் உதித் சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதாடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, “இந்த வழக்கில் உதித் சூர்யா தந்தையின் பங்கு மிக முக்கியமானது. உண்மையான வில்லன், உதித் சூர்யாவின் தந்தை தான். அவரது இந்த குற்றத்தை மன்னிக்க முடியாது, அவரை போலீசார் இதுவரை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் உதித் சூர்யா தந்தையின் ஜாமீன் மனு தேனி கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், அதனை மதுரை ஐகோர்ட்டுக்கு மாற்றினால் உதித் சூர்யாவின் ஜாமீன் மனு பரிசீலிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி இந்த வழக்கை 17-ந் தேதிக்கு அதாவது இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இது சம்பந்தமாக இன்று விசாரித்த கோர்ட் உதித் சூர்யாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. மாணவரின் வயது மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உதித்சூர்யாவுக்கு நீதிபதி ஜாமின் வழங்கியுள்ளார். உதித் சூர்யா, தினமும் காலை 10.30 மணிக்கு மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பு ஆஜராகும்படியும் நிபந்தனையும் விதித்தார்.

ஆனால், உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்க ஏற்கனவே மறுப்பு தெரிவித்த நீதிபதி, அவரது மனுவை தள்ளுபடியே செய்துவிட்டார். வழக்கில் தொடர்புடையவர்களை அடையாளம் காண்பது அவசியம் என்பதால் வெங்கடேசனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதாகவும், இந்த வழக்கு வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இருந்து திட்டம் தீட்டப்பட்டதுபோல் இருப்பதாகவும் நீதிபதி கூறினார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!