யாழ். போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக இருவருக்கு திறந்த இதய அறுவைச் சிகிச்சை..!


யாழ். போதனா மருத்துவமனையில் முதல் முறையாக இரண்டு பேருக்கு திறந்த இதய அறுவைச் சிசிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியாவைச் சேர்ந்த 27 வயதுடைய எஸ்.ராஜசேகரன் என்ற நோயாளிக்கு யாழ். போதனா மருத்துவமனையில் கடந்த 20ஆம் நாள் முதலாவது திறந்த இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதய சிகிச்சை நிபுணர்களான மருத்துவர்கள் முகுந்தன், மற்றும் பிரேம்கிருஸ்ணா ஆகியோர் இந்த திறந்த இதய அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம், 21ஆம் திகதி விசுவமடுவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திறந்த இதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.


அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் தற்போது குணமடைந்து வருகின்றனர் என்று என்று யாழ்.போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி எம்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட யாழ்.போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி எம்.சத்தியமூர்த்தி மற்றும் மருத்துவர்கள் முகுந்தன், பிரேம்கிருஸ்ணா ஆகியோர், ஆறு மருத்துவர்களை உள்ளடக்கிய மருத்துவக் குழுவில் ஆறு மணிநேரம் இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டதாக கூறினர்.

அத்துடன், யாழ். போதனா மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சைப் பிரிவுக்கு தேவையான கருவிகள், வளங்கள், மற்றும் ஆளணி என்பன இல்லை என்றும், இவற்றை நிறைவு செய்தால், வடக்கிலுள்ள இதய நோயாளிகளுக்கான அறுவைச் சிகிச்சைகளை தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.-Source: puthinappalakai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!