12 வருட சேமிப்புக் காசு.. தாய்க்கு பரிசளிக்க நினைத்த இளைஞன் – நெகிழச் செய்த கடை உரிமையாளர்!


தனது 12 ஆண்டு கால சேமிப்புக் காசை முழுவதும் செலவிட்டு, தனது தாய்க்காக ஒரு குளிர்பதனப் பெட்டியை வாங்கி, பிறந்தநாள் பரிசளித்து மகிழ்ந்துள்ளார் 17 வயது கல்லூரி மாணவர்.

35 கிலோ எடை கொண்ட நாணயங்களை அவர் தூக்கிக் கொண்டு கடைக்குச் சென்று, தனது தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்ய நினைத்த போது, அங்கே ரூ.2000 அளவுக்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டது.

ஆனால் இளைஞரின் ஆசையை நிராசையாக்க விரும்பாத கடை உரிமையாளர், குளிர்பதனப் பெட்டிக்கு ரூ.2000 விலைச் சலுகை வழங்கி அசத்தினார்.

ஜெய்ப்பூரை அடுத்த சஹரன் நகரில் வசித்து வரும் பப்புதேவியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 17 வயது மகன் ராம் சிங், தனது ஒட்டுமொத்த சேமிப்பையும் செலவிட்டு குளிர்பதனப் பெட்டி வாங்கிக் கொடுத்துள்ளார்.

12 ஆண்டுகளில் அவர் சேமித்து வைத்த தொகை ரூ.13,500. இது முழுக்க நாணயங்களாக இருந்துள்ளன. அவற்றை வாங்கிக் கொள்ள ஆரம்பத்தில் மறுத்த கடை உரிமையாளர் ஹரிகிஷண், பிறகு நாணயத்தை ஏற்க ஒப்புக் கொண்டார்.

பானைகளில் தனது சேமிப்பை வைத்திருந்ததாகவும், அதனை முழுதாக எண்ணி முடிக்க தனக்கு 4 மணி நேரம் ஆனதாகவும், ஆனால், கடை உரிமையாளர், தான் சொல்வதை நம்புவதாகக் கூறி நாணயங்கள் முழுவதையும் எண்ணாமல் வெறும் 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களை மட்டும் எண்ணிவிட்டு பெற்றுக் கொண்டதாகவும் ராம் சிங் கூறுகிறார்.-Source: dinamani

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!