இசைப்புயலுடன் இணைந்து பணியாற்றிய சாக்சபோன் இசைக்கலைஞர் திடீர் மரணம்..!


புகழ் பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்(69) உடல்நலக்குறைவால் காலமானார். மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.

மறைந்த கத்ரி கோபால்நாத் கர்நாடக மாநிலம் மங்களூரில் 1949ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி பிறந்தார். கலாநிகேதனாவை சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடம் சாக்சபோன் வாசிப்பை கற்ற இவர், சென்னையில் பிரபல மிருதங்க இசைக்கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார்.

கத்ரி கோபால்நாத்தின் இசை சேவையை பாராட்டி மத்திய அரசு 2004ல் பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கவுரவித்தது. சாக்சபோன் மேதை கத்ரி கோபால்நாத்துக்கு தமிழக அரசும் கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்தது. சாக்சபோன் சக்ரவர்த்தி, சாக்சபோன் சாம்ராட், கர்நாடக கலாஸ்ரீ உள்ளிட்ட பட்டங்களை பெற்றுள்ளார். கே.பாலசந்தரின் டூயட் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றியிருந்தார் கத்ரி கோபால்நாத்.

டூயட் படத்தின் அனைத்து பாடல்களிலும் கத்ரி கோபால்நாத்தின் சாக்சபோன் இசை பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் ருத்ரேசு மகந்தப்பாவுடன் இணைந்து 2005-ல் கின்ஸ்மென் இசைத்தொகுப்பை வெளியிட்டார். ஜாஸ்புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஜேம்சுடன் இணைந்து சதர்ன் பிரதர்ஸ் இசைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். கத்ரி கோபால்நாத்தின் 2 மகன்களில் ஒருவரான மணிகாந்த் இசையமைப்பாளராக உள்ளார். மணிகாந்த் கத்ரி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!