பாடகியை சொத்துக்காக காதலனே ஆள் வைத்து சுட்டுக்கொன்றது அம்பலம்.. 6 பேர் கைது


டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த நாட்டுபுறப் பாடகி கடந்த வாரம் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்தபெண்ணின் காதலன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியின் கிரேட்டர் நொய்டா பகுதியில் வசித்து வந்த நாட்டுபுறப் பாடகி சுஷ்மா(25). இவரை கடந்த 1ஆம் தேதி இரவு 8 மணி அளவில் இரண்டு மர்ம நபர்கள் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை மாலை துப்பாக்கிச்சூடு நடத்திய இரண்டு பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர்களை கைது செய்து விசாரித்த போது தான் இந்த கொலைக்கு பின்னால் உள்ள முழு சதியும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் சுஷ்மாவின் காதலன் கஜேந்திர பாட்டிதான் கொலை செய்ய சொன்னதாக தெரிவித்தனர். இதையடுத்து சுஷ்மாவின் காதலர் கஜேந்திர பாட்டி மற்றும் 3 பேரை இந்த வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை குறித்து காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில் சுஷ்மா தனது தாய், சகோதரி மற்றும் அவரது காதலன் கஜேந்திர பாட்டி ஆகியோருடன் வசித்து வந்தார். சுஷ்மாவும் அவரது காதலன் கஜேந்திர பாட்டியும் திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.

ஆனால் சுஷ்மாவிற்கும் அவரது காதலன் கஜேந்திர பாட்டிக்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சுஷ்மா நிகழ்ச்சிகளில் பங்கேற்று நாட்டுபுறப் பாடல்கள் பாடுவதையும் அவரது காதலன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். ஆனால் சுஷ்மா பாடாமல் இருக்க முடியாது என்று மறுத்துவிட்டார். இது ஒருபுறம் எனில் சொத்து பிரச்னையால் இருவருக்கும் இடையே மனகசப்பு அதிகமாகி தினமும் சண்டை வந்துள்ளது. காதலி மீது அவநம்பிக்கை அடைந்த கஜேந்திர பாட்டி அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சுஷ்மாவை இவர் கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார் அப்போது சுஷ்மா சென்ற காரை விபத்துக்குள்ளாக்கி அவரை கொல்ல முயன்று உள்ளார்கள். ஆனால் அதில் சுஷ்மா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதனால் கஜேந்திர பாட்டி சுஷ்மாவை சுட்டுக் கொலை செய்ய பிரமோத்,அஜப் சிங் மற்றும் டிரைவர் அமித் ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார். இதன்படி கஜேந்திர பாட்டி சுஷ்மாவை சுட்டுக் கொலை செய்ய முகேஷ் மற்றும் சந்தீப் என்ற இருவருக்கும் 8 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். இவர்கள் திட்டமிட்டபடி 1ஆம் தேதி இரவு சுஷ்மா தனது வீட்டிற்கு வந்து காரிலிருந்து இறங்கிய உடனே அவரை சுட்டுக்கொன்றுள்ளார்கள் என்றார். துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரும் போலீசில் சிக்கியதால் இப்போத கஜேந்திர பாட்டியின் சதி அம்பலமாகி அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!