கஷோகி கொலைக்கு நான் உத்தரவிடவில்லை – சவுதி பட்டத்து இளவரசர் மறுப்பு


ஜமால் கஷோகி கொலைக்கு நான் உத்தரவிடவில்லை என்று சவுதி பட்டத்து இளவரசர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதற்கு “முழுப்பொறுப்பையும்” ஏற்றுக்கொள்வதாக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறினார். ஆனால் அவர் அதற்கு தான் “உத்தரவிட்டதாக கூறப்பட்ட” குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இது ஒரு கொடூரமான குற்றம் என்று 34 வயதான இளவரசர் முகமது ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான 60 நிமிட பேட்டியில் கூறினார்.

சவுதி அரேபியாவின் ஒரு தலைவராக இந்த கொலைக்கு நான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன், குறிப்பாக இது சவுதி அரசாங்கத்திற்காக பணியாற்றும் தனிநபர்களால் செய்யப்பட்டது.

சவுதி அரசாங்கத்திற்காக 3 லட்சம் மக்கள் தினமும் என்ன செய்கிறார்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள் என கூறினார்.

நியூயார்க்கில் வியாழக்கிழமை ஒரு பேட்டியில் கஷோகியின் வருங்கால மனைவி என்று சொல்லப்பட்ட ஹாட்டிஸ் செங்கிஸ், அசோசியேட்டட் பிரஸ்சிடம் கூறியதாவது;-


கஷோகியின் படுகொலைக்கான குற்றவாளிகள் யார் என்று இளவரசர் முகமது தன்னிடம் சொல்ல வேண்டும். “ஜமால் ஏன் கொல்லப்பட்டார்? அவரது உடல் எங்கே? இந்தக் கொலைக்கான நோக்கம் என்ன? ” என கேள்வி எழுப்பி இருந்தார்.

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் அவரை விமர்சித்த கஷோகி கொலைக்கு அவர் உத்தரவிட்டாரா என்று கேட்டதற்கு, இளவரசர் “நிச்சயமாக இல்லை” படுகொலை என்பது “ஒரு தவறு” என்று அவர் கூறினார்.

ஜமால் கஷோகி அக்., 2, 2018 அன்று தனது துருக்கிய காதலியை திருமணம் செய்யத் தேவையான ஆவணத்தை சேகரிப்பதற்காக, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றார். சவுதி அரசாங்கத்தின் முகவர்கள் தூதரகத்திற்குள் கஷோகியைக் கொன்றனர். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி மறைத்து விட்டனர். அவரது உடலை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த படுகொலையில் 11 பேர் மீது சவுதி அரேபியா குற்றம்சாட்டி விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது, இது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.

இந்த கொலைக்கு சவுதி அரேபியா பொறுப்பேற்றுள்ளதாக ஐ.நா அறிக்கை ஒன்று வலியுறுத்தியதுடன், இளவரசர் முகமதுவின் பங்கை விசாரிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது.

இளவரசர் முகமது “கொலைக்கு காரணம்” என்று நம்புவதாக அமெரிக்க காங்கிரஸ் கூறியுள்ளது. பட்டத்து இளவரசர் நீண்ட காலமாக எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று சவுதி அரேபியா வலியுறுத்தியுள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!