பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ மரணம்… கைதான ஜெயகோபால் சிறையில் அடைப்பு..!


பேனர் சரிந்து விழுந்த விபத்தில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானது தொடர்பான வழக்கில் கைதான அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னையை அடுத்த குரோம் பேட்டை நெமிலிச் சேரி பவானி நகரை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுபஸ்ரீ (23).

கடந்த 12-ந்தேதி சுபஸ்ரீ துரைப்பாக்கத்தில் உள்ள கம்பெனியில் வேலை முடிந்து வீட்டுக்கு ஸ்கூட்டியில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது பள்ளிக்க ரணையில் சாலையின் நடுவில் இருந்த அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு பேனர் சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதில் ஸ்கூட்டியில் இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. சுபஸ்ரீ உயிர் இழப்புக்கு காரணமான அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெய கோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், முக்கிய பிரமுகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஜெயகோபாலை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். பள்ளிக்கரணை போலீசாரும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்த ஜெயகோபால் தலைமறைவானார்.


அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் உள்ள இஸ்லாம்பூர் என்ற இடத்தில் இருக்கும் தனியார்விடுதியை சுற்றிவளைத்து ஜெயகோபாலை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

கைதான முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெயகோபால் இன்று காலை 11 மணியளவில் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதி ஸ்டார்லி, ‘சட்டவிரோதமாக பேனர் வைத்தது உண்மையா?’ என்று கேட்டார்.

அப்போது, பேனர் வைத்தது தவறுதான் என்பதை ஜெயகோபால் ஒப்புக்கொண்டார். இதையடுத்து வருகிற அக்டோபர் 11-ந்தேதி வரை 14 நாட்கள் அவரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ஜெயகோபாலை போலீசார் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு உடல் பரிசோதனை நடைபெற்றது.

பின்னர் அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அக்டோபர் 11-ந் தேதி ஜெயகோபால் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதுபோல் பேனர் கட்டியதாக கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!