திடீரென மேம்பாலத்தில் இருந்து பஸ் மீது குதித்த வாலிபர்… அதிர்ச்சியில் மக்கள்..!


திருப்பூரில் மேம்பாலத்தில் இருந்து கீழே குதிக்கும் வாலிபரின் வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்புறம் மேம்பாலம் உள்ளது. நேற்று முன்தினம் காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இந்த மேம்பாலத்தின் மேல் நடந்து சென்று கொண்டிருந்தார்.

திடீரென்று அந்த வாலிபர் பாலத்தின் கைப்பிடி சுவரில் ஏறி நின்று கம்பியை பிடித்தபடி கீழே குதிக்க தயாராக நின்று கொண்டிருந்தார்.

இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அந்த வாலிபரை கீழே குதிக்க வேண்டாம் என்று சத்தம் போட்டனர். ஆனால் வாலிபர் பல்லடம் சாலையை நோக்கி வந்த அரசு பஸ்சின் மீது குதித்தார். இதை பார்த்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் வாலிபர் பஸ்சின் மேற்பரப்பில் இருந்து உருண்டு கீழே விழுந்தார். இதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டு தெற்கு போலீசில் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி பகுதியை சேர்ந்த சரத்குமார்(வயது 27) என்பது தெரியவந்தது. மேலும் இவர் சில காலம் டிரைவராக பணியாற்றியதும், மனநிலை பாதித்தும் காணப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவரிடம் இருந்த செல்போன் மூலம் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுடன் அந்த வாலிபரை அனுப்பி வைத்தனர்.

மேம்பாலத்தில் இருந்து கீழே குதிக்கும் வாலிபரின் வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!