விடுதியிலுள்ள மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு – பள்ளி நிறுவனர் சிறையில் அடைப்பு..!


திருப்பூர் – திருமுருகன்பூண்டி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏழை மாணவர்கள் 62 பேர் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளியின் நிறுவனர் ராஜசேகர் (வயது 50) என்பவர், பள்ளியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து பள்ளிக்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் மகேஸ்வரன், வேலம்பாளையம் வருவாய் ஆய்வாளர் சரவணன், பொங்குபாளையம் கிராம நிர்வாக அலுவலர் காந்திமதி, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி பிரேமலதா உள்ளிட்ட அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மாணவர்களுக்கு பள்ளியின் நிறுவனர் ராஜசேகர் பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு தங்கி படித்த 62 ஏழை மாணவர்களும் கொடுவாய் பகுதியிலுள்ள ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.

இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பில் ராகுல் என்பவர் பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார், ராஜசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பள்ளிக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த ராஜசேகர் அங்கும் ராமகிருஷ்ண ஆசிரமம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!