இப்படி அரசியல் பேசினால் தானே படம் ஓடும்.. விஜயை தாக்கிய அதிமுக.!


பரபரப்பு அரசியல் பேசிதான் விஜய் தனது படங்களை ஓட வைத்துக்கொண்டு இருக்கிறார் என்று அதிமுகவின் வைகைச்செல்வன் குற்றம்சாட்டினார்.

பிகில் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், சுபஸ்ரீ பேனர் விழுந்து உயிரிழந்தது தொடர்பாகவும், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றும், நடிகர் விஜய் பேசியிருந்தார்.

இந்த கருத்துக்கள், அரசியல் ரீதியாக சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. அதிமுக அரசை தொடர்ந்து விஜய் தாக்கி பேசி வருவதாக கூறப்படும் நிலையில், இதுபற்றி வைகைச்செல்வன் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

திரைப்படங்கள் 20 நாளுக்கு மேல் ஓடுவதே சிரமமாக உள்ளது. திரைப்படங்களை பரபரப்புக்கு உள்ளாக்க அரசியல் தேவைப்படுகிறது. ஒருகாலத்தில் கதையை நம்பி படம் எடுத்ததால் நீண்ட காலம் படம் ஓடியது. ஓராண்டு வரையெல்லாம் ஓடிய வரலாறு உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை. கதையே இல்லாத படத்தை எடுத்துவிட்டு 2 மாத காலத்திற்கு ஓட்டுவதற்குதான் இதுபோன்ற விழாக்களில், அரசியல் பேசப்படுகிறது.

இப்படி பரபரப்புக்கு உள்ளாக்கி, படத்தை ஓட வைப்பதில் பல நடிகர்கள் இருக்கிறார்கள். அதில் நடிகர் விஜய்யும் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். இப்படித்தான் சமீபகாலமாக அவரது படங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.

யாரை எங்கே வைக்க வேண்டுமோ, அங்கே தான் வைக்க வேண்டும் என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே தான் அவர்களை தமிழக மக்கள் வைத்துள்ளார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் வரையில், அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணம்.

அதிமுக அரசு அடுத்தடுத்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. தொடர்ந்து பத்து வருட காலமாக அதிமுக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. பத்து வருடங்களாக விஜய் படங்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே அவருக்கு எந்த தொல்லையும் தரப்படவில்லை என்பது தானே உண்மை. ஆனால் தனது படங்களை ஓட வைப்பதற்காக இதுபோன்ற விழாக்களில் விஜய் பரபரப்புக்கு பேசி வருகிறார். இவ்வாறு வைகைசெல்வன் தெரிவித்தார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!