சொத்துக்காக சென்னை பெண் எரித்துக்கொலை… வக்கீல் பரபரப்பு வாக்குமூலம்.!


மடிப்பாக்கத்தில் சொத்துக்காக சென்னையை சேர்ந்த பெண்ணை பெங்களூருவுக்கு அழைத்து சென்று எரித்து கொலை செய்த நிலத்தரகரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 60). கடந்த மாதம் 4-ந்தேதி வழக்கு தொடர்பாக மயிலாப்பூரில் உள்ள தனது வக்கீலை சந்திக்க செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து தங்கை விஜயலட்சுமியை அவரது அண்ணன் ஆலந்தூரை சேர்ந்த சுகுமாறன்(63) என்பவர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

பின்னர் இதுகுறித்து மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சுகுமாறன் புகார் செய்தார். பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர் உத்தரவின் பேரில், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சவுரிநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் விஜயலட்சுமியின் செல்போனை ஆய்வு செய்தபோது, அவர் கடைசியாக பெங்களூருவை சேர்ந்த நிலத்தரகர் பாஸ்கர் (33) என்பவருடன் பேசியது தெரியவந்தது. இதையடுத்து, விஜயலட்சுமி குறித்து துப்பு துலக்க இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் கொண்ட தனிப்படையினர் பெங்களூரு சென்றனர். அப்போது தீவிர விசாரணைக்கு பின் பெங்களூரு அருகே உள்ள சிங்கந்தரா என்ற கிராமத்தில் பாஸ்கரை போலீசார் பிடித்து சென்னை அழைத்து வந்து தீவிரமாக விசாரித்தனர்.

அப்போது போலீசாரிடம் பாஸ்கர் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

மடிப்பாக்கத்தை சேர்ந்த விஜயலட்சுமிக்கு பெங்களூரு கே.ஆர்.புரத்தில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டை விற்க விஜயலட்சுமி அடிக்கடி பெங்களூரு வரும்போது பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக வீடு விற்பது தொடர்பாக விஜயலட்சுமியை அழைத்து செல்வேன். இந்த வீட்டை விற்பது தொடர்பாக விஜயலட்சுமிக்கு தெரியாமல் சிலரிடம் பணம் வாங்கிய நிலையில், பணம் தந்தவர்கள் வீட்டை வாங்கித்தர கட்டாயப்படுத்தினர்.

கடந்த மாதம் 4-ந்தேதி விஜயலட்சுமி சென்னை மடிப்பாகத்தில் இருந்து மயிலாப்பூரில் உள்ள தனது வக்கீலை சந்திக்க செல்வதாக கூறினார். அப்போது நான் காரில் சென்னை வந்து விஜயலட்சுமியிடம் பெங்களூரு இடத்திற்கு ரூ.1 கோடியே 20 லட்சத்திற்கு வாங்க ஆள் வந்துள்ளதாக கூறி பெங்களூரு அழைத்துக்கொண்டு சென்றேன்.

அப்போது செல்லும் வழியில் குளிர்பானத்தில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை கலந்து கொடுத்தேன். இதை குடித்த விஜயலட்சுமி காரில் மயங்கி கிடந்தார். பெங்களூரு சென்றதும் அவரை எழுப்பியும், எழுந்திருக்காததால் இறந்துவிட்டதாக நினைத்தேன்.

உடனே விஜயலட்சுமிக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லை என நினைத்து, யாருக்கும் அடையாளம் தெரியாமல் எரித்துவிட்டால், வீட்டை நாம் எடுத்து விற்றுவிடலாம் என்று திட்டம் போட்டேன்.

பின்னர் பெங்களூரூ பேத்மங்கலம் பகுதியில் புதர் அதிகமாக இருந்த இடத்தில், மயங்கிய நிலையில் இருந்த விஜயலட்சுமியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றேன். பின்னர் போலீசாருக்கு பயந்து பெங்களூரு சிங்கந்தரா பகுதியில் தங்கிவிட்டேன். என்னை கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் என்னை எப்படியோ போலீசார் கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

விஜயலட்சுமியை எரித்து கொன்ற தகவலை அறிந்ததும், மடிப்பாக்கம் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.இதுபற்றி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பேத் மங்கலம் போலீசாருக்கு, மடிப்பாக்கம் போலீசார் தகவல் தந்தனர். பேத்மங்கலம் போலீசார் வந்து நிலத்தரகர் பாஸ்கரை கைது செய்து அழைத்து சென்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!