சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி – 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நகரை சேர்ந்த கவுசுல்லா அம்ஜத்துல்லா கான்(30), துபாயில் பணியாற்றியபடி மனைவி ஆயிஷா சித்திக்கா(29) மற்றும் இரு குழந்தைகளுடன் இங்கேயே வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி ஓமன் நாட்டின் தோபார் மாகாணத்தில் உள்ள சலாலா என்ற நகரத்தில் இருந்து கவுசுல்லா அமஜ்த்துல்லா கான் குடும்பத்தாருடன் காரில் துபாய் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது நிலை தடுமாறிய அவரது கார் எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கவுசுல்லா அம்ஜத்துல்லா கான் அவரது மனைவி ஆயிஷா சித்திக்கா, பிறந்து எட்டு மாதங்களே ஆன ஆண் குழந்தை ஹம்சா கான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எதிர் வாகனத்தில் இருந்த மூன்று பேரும் உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்தில் உயிர்தப்பிய கவுசுல்லா அம்ஜத்துல்லா கான் தம்பதியரின் மூன்று வயது பெண் குழந்தை ஹனியா சித்திக்கா, உயிருக்கு ஆபத்தான நிலையில் மஸ்கட் நகரில் உள்ள கவ்லா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.