மேட்டூர் – ஓட்டலுக்கு சாப்பிடச் சென்ற பிரபல ரவுடி மரணம்… பின்னணியில் திடுக்கிடும் தகவல்…!


சேலம் மாவட்டம் மேட்டூர் ஆர்.எஸ். பகுதியை சேர்ந்தவர் அமிர்தராஜ் (வயது 45), பிரபல ரவுடி. நேற்று முன்தினம் மதியம் அமிர்தராஜ் தனது நண்பர் முரளி (42) என்பவருடன் மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் உள்ள ஒரு தாபா ஓட்டலுக்கு சாப்பிடச்சென்றார்.

அப்போது காரில் வந்த கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அமிர்தராஜையும், அவரது நண்பர் முரளியையும் சரமாரியாக வெட்டினர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் தப்பிச்சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அமிர்தராஜ் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த முரளி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த ரவுடி அமிர்தராஜ் மீது ஆள்கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கொளத்தூர் மற்றும் கருமலைக்கூடல் போலீஸ் நிலையங்களில் உள்ளன. அவரது கொலை தொடர்பாக மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சந்திரசேகரன், சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மேட்டூர் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அந்த பகுதி போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் கொலைகும்பலை சேர்ந்த 6 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்த சதீஷ்(30), நடராஜன்(24) மாரிசெல்வம்(19), வேல்முருகன்(21), பாரதிராஜா (24), கருப்பசாமி (32) ஆகியோர் என்பது தெரியவந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இவர்களில் கருப்பசாமிக்கு, ரவுடி அமிர்தராஜை வெட்டும்போது கைவிரலில் காயம் ஏற்பட்டு இருந்தது. எனவே காயத்துக்காக கருப்பசாமி போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சதீஷ், நடராஜன், மாரிசெல்வம், வேல்முருகன், பாரதிராஜா ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 கத்தி, ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் மேட்டூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு ராஜா உத்தரவிட்டார்.

போலீசார் விசாரணையில் ரவுடி அமிர்தராஜ் ஏன் வெட்டி கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

மேட்டூர் ராமன்நகரை சேர்ந்தவர் ஸ்டாலின்(40). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். மேட்டூர் மின்நகரை சேர்ந்த சதீஷ் என்பவர் வங்கியில் கடன் வாங்கி இருந்தார்.

இதை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. எனவே வங்கிக்கு ஸ்டாலின் பணம் செலுத்தி அந்த வீட்டை விற்கும் உரிமையை(பவர் ஆப் அட்டார்னி) சதீசிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

இந்தநிலையில் பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாகவும், வீட்டை திரும்ப தன்னிடம் ஒப்படைக்குமாறும் சதீஷ், ஸ்டாலினிடம் கேட்டு வந்தார். ஆனால் ஸ்டாலின் இதற்கு சம்மதிக்க வில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

எனவே சதீஷ் ரவுடி அமிர்தராஜின் உதவியை நாடினார். அவர் ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டை சதீசிடம் ஒப்படைக்குமாறு வற்புறுத்தினார். இந்த பேச்சுவார்த்தை கடந்த ஒரு வருடமாக நீடித்தது.

மேலும் ஸ்டாலின் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலிலும் அமிர்தராஜ் தலையிட்டார். இது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எனவே அவர் அமிர்தராஜை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்.

இதற்காக தூத்துக்குடியில் இருந்து கூலிப்படையை சேர்ந்த 6 பேருக்கு பணம் கொடுத்து அமிர்தராஜை தீர்த்துக்கட்ட மேட்டூருக்கு வரவழைத்து இருக்கிறார்.

இந்த கூலிப்படையினர் கடந்த 10 நாட்களாக மேட்டூரில் தங்கி நோட்டம் விட்டுள்ளனர். நேற்று முன்தினம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமிர்தராஜிக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி தாபா ஓட்டலுக்கு அமிர்தராஜ் தனது நண்பர் முரளியுடன் வந்தார். அப்போது அங்கு ஸ்டாலின் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

இந்தநிலையில் அவரை பின்தொடர்ந்து காரில் தாபா ஓட்டலுக்கு வந்த கூலிப்படையினர் அமர்தராஜை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து உள்ளனர்.

பின்னர் கூலிப்படையினர் காரிலும், ஸ்டாலின் மோட்டார்சைக்கிளிலும் அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர். இவ்வாறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அமிர்தராஜ் கொலையில் முக்கியப்புள்ளியான ஸ்டாலினை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
– Source : dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!