தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…!


குமரி கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 30-ந் தேதி ஒக்கி புயல் தாக்கியதற்கு பின் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்து குளிர்காலம் தொடங்கி விட்டது. இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர உள்ளது.

இந்த நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடலில் வருகிற 25-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

இதன் காரணமாக மேற்கு அந்தமான்-நிகோபார் தீவுகளின் கடற்கரை பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு 2.5மீ முதல் 3.2 மீ உயரத்துக்கு அலை அடிக்கிறது.


எனவே அந்தமான் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் குமரி கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலடுக்கு சுழற்சியில் கேரள கடற்கரை பகுதியில் 2 மீ. முதல் 2.2 மீ உயரத்துக்கு அலை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று ராமேசுவரத்தில் 8 செ.மீ. மழையும், பாம்பனில் 4 செ.மீ. மழையும் பெய்துள்ளது. நாகை, பாபநாசம் (நெல்லை), ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

சென்னையில் இன்று காலை ஒரு சில இடங்களில் 8 மணி அளவில் லேசாக மழை தூறியது. குளிர்காற்று வீசியது. தொடர்ந்து வானம் மேகத்துடன் காணப்பட்டது. – Source : maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!