`உழவுப் பணியில் இருந்த டிராக்டரைப் பறிமுதல் செய்த வங்கி ஊழியர்கள்!’ – தற்கொலைக்கு முயன்ற விவசாயி

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழ வண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 50). விவசாயியான இவர், அரியலூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் ரூ.9 லட்சம் கடன் பெற்று டிராக்டர் வாங்கி விவசாயம் செய்து வந்தார்.

டிராக்டர் வாங்கியதற்காக மாதந்தோறும் வங்கியில் கடன் தவணையை செலுத்தி வந்த அவர், கடந்த 2 மாதமாக தவணை தொகையை செலுத்தவில்லை.

2 மாத கால தவணை தொகையை வருகிற 6-ந் தேதிக்குள் வங்கியில் செலுத்த வேண்டும் எனவும், செலுத்த தவறினால் டிராக்டர் பறிமுதல் செய்யப்படும் என வங்கி நிர்வாகம் கடந்த 30-ந்தேதி தேவேந்திரனுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் நேற்று தேவேந்திரன், அவரது வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த வங்கி அதிகாரிகள், திடீரென டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். இதனால் விரக்தியடைந்த தேவேந்திரன், பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து விட்டார்.

உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வங்கி அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்ததால் விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.