நீண்ட காலமாக திருடி வந்த டிரம்ப்பின் முன்னாள் பார்ட்னர் சிக்கியது எப்படி..?


விமான நிலையத்தில் நீண்ட காலமாக திருடி வந்த டிரம்ப்பின் முன்னாள் பார்ட்னர் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நட்சத்திர ஓட்டல்களின் தலைமை நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தினேஷ் சாவ்லா, அமெரிக்காவின் விமான நிலையத்தில் இருந்து பொருட்களை திருடியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சாவ்லா நட்சத்திர ஓட்டல்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முன்னாள் பிசினஸ் பார்ட்னராகவும் இருந்து உள்ளார்.

மெம்பிஸ் சர்வதேச விமான நிலையத்தில் திருடப்பட்ட சூட்கேஸை அவர் தனது காரில் வைத்து விமானத்தை பிடிக்க விமான நிலையத்திற்குள் திரும்பிச் சென்றதாக போலீசார் கூறி உள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்னர் விமான நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சூட்கேஸ் மற்றும் பொருட்களை கண்டுபிடித்ததாக விமான நிலைய போலீசார் தெரிவித்து உள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மெம்பிஸ்சுக்கு திரும்பியபோது சாவ்லா கைது செய்யப்பட்டார், மேலும் இரண்டு பைகள் மற்றும் அவற்றில் உள்ள பொருட்கள் 4,000 டாலர் மதிப்புள்ளதை திருடியதாக அவர் ஒப்புக் கொண்டதாக போலீஸ் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக அவர் பொருட்களை திருடி வந்ததாக ஒப்புக்கொண்டு உள்ளார். ஆனால் மற்ற திருட்டுகள் பற்றிய விவரங்களை வழங்கவில்லை என அறிக்கை கூறுகிறது.

இவ்வாறு பொருட்களை எடுத்துச் செல்வது தவறு என்று தனக்குத் தெரியும் என்றும் ஆனால் அவர் அதை சிலிர்ப்பூட்டும் அனுபவத்திற்கும் உற்சாகத்துக்கும், செய்வதாக சாவ்லா ஒரு அதிகாரியிடம் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!