ரெயில்வேயில் டிராக்மேன்…. மும்பை ஐஐடியில் 2 டிகிரி முடித்த இளைஞரால் ஆச்சரியம்..!


பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், மும்பை ஐஐடியில் படிப்பை முடித்திருந்தும், ரெயில்வே துறையில் டிராக்மேனாக பணிபுரிகிறார். இவர் கூறும் காரணம் என்ன என்பதை பார்ப்போம்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷ்ரவன் குமார். இவர் மும்பை ஐஐடியில் பி.டெக் மற்றும் எம்.டெக் படித்து முடித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஐஐடி படிப்பை முடித்து வெளியே வந்த இவர், அரசு வேலைக்காகவே முயற்சித்து வந்துள்ளார்.

இவரது நண்பர்கள் பலமுறை தங்கள் துறையில் பணிக்கு முயற்சி செய்யுமாறு கேட்டுப் பார்த்துள்ளனர். ஆனால், ஷ்ரவன் எதற்கும் செவி சாய்க்காது, அரசு பணிதான் வேண்டும் என கடுமையாக முயற்சித்துள்ளார்.

சமீபத்தில் ரெயில்வேதுறை பணிக்கான ஆர்.ஆர்.பி. தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு ரெயில்வேயின் டி பிரிவு பணி தன்பாத் பகுதியில் கிடைத்திருக்கிறது. அங்கு டிராக்மேன் பணியில் சேர்ந்துள்ளார்.

மும்பை ஐஐடி

ஐஐடியில் படித்து முடித்தவர், 10ம் வகுப்பு தகுதி மட்டுமே தேவைப்படும் டி பிரிவு பணிக்கு வந்தது அங்கிருந்த அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்தது.

இது குறித்து ஷ்ரவன் கூறுகையில், ‘பணி உத்தரவாதம்தான் விடா முயற்சி செய்து அரசு பணியில் சேர்ந்ததற்கான மிக முக்கியமான காரணம்’ என கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!