மனைவியுடன் சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்!


மனைவிக்கு புற்றுநோய் வந்துள்ளதால் அவருடன் இன்பமாக இருக்க முடியவில்லை. இதனால் விவாகரத்து வேண்டும் என்று ஒரு கணவர் கோர்ட்டுக்கு வந்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த திருமால் மற்றும் அம்பிகா தம்பதியருக்கு கடந்த 2011 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன சில நாட்களிலேயே திருமாலின் மனைவி அம்பிகாவுக்கு வாய்ப்புற்று நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அம்பிகாவுக்கு தாடை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவ்வாறு புற்றுநோய் இருப்பதால், தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாக கூறி கணவர் திருமால் ஊத்தகரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இருவருக்கும் விவகாரத்து வழங்கி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவரின் மனைவி கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், விவகாரத்து உத்தரவை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமால் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனைவி அம்பிகா தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் வி. சுப்பிரமணியம், 2011 ம் ஆண்டு புற்று நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டாலும் உடல் நலத்துடன் தான் இருந்து வருகிறார். இந்து திருமண சட்டத்தின் படி தொழுநோய், தாம்பத்திய உறவினால் ஏற்படும் ஹெச்ஐவி போன்ற தொற்றுநோய் இருந்தால் மட்டுமே விவகாரத்து கோர முடியும். புற்றுநோயை காரணம் காட்டி விவகாரத்து கோர முடியாது.

தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டால் புற்றுநோய் பரவாது என வாதம் வைக்கப்பட்டது. புற்று நோயை காரணம் கூறி விவகாரத்து அளிக்கப்பட்டால், அந்த உத்தரவை பின்பற்றி பலரும் விவகாரத்து கோர நேரிடும் என வாதம் வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!