வெட்கமாக இல்லையா பிரபாகரன் பெயரை சொல்லி ஓட்டு கேட்க..? ராஜபக்சே மீது ரணில் தாக்கு


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்க வெட்கமாக இல்லையா? என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே.

இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய போட்டியிடுகிறார். ஐக்கிய தேசியக் கட்சி இன்னமும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

ஜேவிபி சார்பில் அனுரகுமார திசநாயக்க களத்தில் இருக்கிறார். தமிழர் தரப்பில் எந்த ஒரு நிலைப்பாடும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே அதிபர் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, ராஜபக்சே அரசு ஒரு கொலைகார அரசு சாடியிருந்தார். இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்சே, 2005-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைவதை பிரபாகரன் விரும்பவில்லை. அதனால் ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதனையே தமிழர்களும் கடைபிடித்தனர். பிரபாகரன் வேண்டுகோளை இப்போதும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றார். பிரபாகரனை முன்வைத்து மகிந்த ராஜபக்சே பிரசாரம் செய்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ரணில் விக்கிரமசிங்க, 2009-ம் ஆண்டு மிகப் பெரிய மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுதான் யுத்தத்தையே ராஜபக்சே முடிவுக்கு கொண்டுவந்தார். இந்த காயத்தை தமிழ் மக்களும் அவ்வளவு எளிதாக மறந்துவிடுவார்கள் என கணக்குப் போடுகிறார் மகிந்த ராஜபக்சே. எந்த பிரபாகரனை வீழ்த்தியதாக மகிந்த ராஜபக்சே, அதே பிரபாகரனை முன்வைத்து தேர்தல் பிரசாரம் செய்வது வெட்கமாக இல்லையா? என்றார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!