மகனுக்கு தீராத புற்று நோய்! வெள்ள நிவாரணத்திற்கு அள்ளிக் கொடுத்த அனஸ்!


மகனின் புற்றுநோய் செலவுக்காக வைத்திருந்த பணத்தை நிதியுதவிக்கு அளித்த தம்பதியினருக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக் கூறிய வண்ணம் உள்ளனர்.

சென்ற வாரத்திலிருந்து கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த இயற்கை பேரிடரால் பலதரப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக உலகின் பல்வேறு இடங்களிலும் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 95-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2.26 லட்சம் பேர் பல்வேறு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலத்தின் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் அணஸ். இவருடைய மனைவியின் பெயர் ராஜீலா. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் 4 வயதானவன். அவன் பிறக்கும்போதே மனநலம் குன்றி பிறந்தான். 6 மாதங்களுக்கு முன்னர் அவன் புற்றுநோயால் தாக்கப்பட்டான். சிகிச்சைக்கு செலவு அதிகமாகும் என்பதால் தம்பதியினர் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடருக்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். அணஸ் உதவி செய்ய வேண்டுமென்று நினைத்தார். அதற்கு ஏற்றவாறு யாரும் எதிர்பார்க்காத வகையில் தன் மகனின் சிகிச்சைக்காக வைத்திருந்த பணம் முழுவதையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிவிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், “என் இளைய மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். கடுமையான பண நெருக்கடியை சமாளித்து வருகின்றோம். ஆனால் கேரளாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படும் அவதிக்கு முன்னால் எனக்கு என் மகனின் நோய் பெரிதாக தெரியவில்லை. ஆதலால் அவன் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை நான் நிவாரணத்திற்கு அளித்துள்ளேன். நிச்சயம் இந்த இயற்கைப் பேரிடரில் இருந்து கேரளா மீண்டும் எழுந்து வரும் என்று நம்புகிறேன்” என்று பதிவு செய்திருந்தார்.

இதனை படித்து நெட்டிசன்கள் அவருடைய உயரிய பண்பினை பாராட்டி வருகின்றனர். சம்பவத்தை அறிந்த கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு மகனின் சிகிச்சைக்கு உதவுவதாக கூறியுள்ளார்.
இந்த சம்பவமானது அனைவரையும் நெகிழ செய்துள்ளது.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!