தேசிய விருது கிடைத்ததே தெரியாத காஷ்மீர் சிறுவன்… படக்குழு திணறல்..!


நடிப்புக்காக தேசிய விருது வென்ற காஷ்மீர் சிறுவனை படக்குழுவினர் தொடர்பு கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அம்மாநிலத்தை இரண்டாக பிரித்தும் மத்திய அரசு மசோதா நிறைவேற்றியது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தெரியவந்தால் மாநிலத்தில் கலவரம் உண்டாகும் என அறிந்து, தொலை தொடர்பு சேவைகளை முடக்கியும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், 2018-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதில், சிறந்த உருது மொழி படத்துக்கான விருதுக்கு ‘ஹமீத்’ என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘ஹமீத்’ படத்தில் நடித்த காஷ்மீரைச் சேர்ந்த தல்ஹா அர்ஹத் ரேஷி என்ற சிறுவன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான்.

இது தொடர்பாக, அச்சிறுவனுக்கு தகவல் தெரிவிப்பதற்காக படக்குழுவினர் தொடர்பு கொண்டபோது, தொலை தொடர்பு சேவை இல்லாததால் என்ன செய்வதென தவித்தனர்.

இது தொடர்பாக பேசிய இயக்குநர் இஜாஸ் கான், “தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து சிறுவனுக்கு தகவலளிக்க முடியாதது வேதனையாக இருக்கிறது” என கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!