காஷ்மீர் விவகாரத்தில் அரசை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி..!


காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்சேதுபதி கடுமையாக கண்டிக்கும் வகையில் விமர்சனம் செய்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு சமீபத்தில் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு தி.மு.க. – காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவரான நடிகர் கமல்ஹாசனும், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து இருந்தார். ஆனால் ரஜினி மத்திய அரசை பாராட்டி பேசினார்.

இந்த நிலையில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்சேதுபதி, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக கண்டிக்கும் வகையில் விமர்சனம் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு சென்றிருந்த அவர் அங்கு வைத்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பரபரப்பான கருத்துக்களை கூறியுள்ளார்.

இது தொடர்பாக விஜய் சேதுபதி அங்குள்ள தமிழ் வானொலிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- காஷ்மீர் விவகாரத்தில் உங்களது கருத்து என்ன?

பதில்:- அது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அந்தந்த பகுதி மக்கள் பிரச்சனை பற்றி அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். உங்கள் வீட்டு வி‌ஷயத்தில் நான் தலையிட முடியுமா? நீங்கள்தான் அந்த வீட்டில் வாழ்கிறீர்கள்.

உங்களுக்குத்தான் தெரியும். உங்கள் மாத பட்ஜெட் என்ன? குழந்தைகளுக்கு என்ன தேவை? என்பது. எனவே நான் உங்கள் மீது அக்கறை செலுத்தலாம். ஆளுமை செலுத்த முடியாது. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. ஈழ விவகாரத்திலும் அப்படித்தான் செய்ய முடியும். காஷ்மீர் விவகாரம் மிகுந்த மன வருத்தத்தை அளித்தது.

காஷ்மீரில் ஒருவர் வீட்டு சிறையில் இருப்பதாக கூறிய செய்தி பார்த்தேன். இந்த நேரத்தில் பெரியார் சொல்வதை நான் திரும்ப சொல்கிறேன். அவங்களோட பிரச்சனையை அவர்கள் தான் பார்த்துக்கணும். எனவே மீண்டும் சொல்கிறேன். அக்கறைதான் செலுத்தணும். ஆதிக்கம் செலுத்த கூடாது.

கேள்வி:- கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் நீங்கள் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?

பதில்:- முத்தையா முரளிதரன் வாழ்க்கை பற்றிய கதை கேட்டேன். அதில் நடிக்கிறேன். அந்த படத்தில் ஒற்றுமை பற்றி பல வி‌ஷயங்கள் பேசப்படுகின்றன. நல்ல படமாக அதனை பார்க்கிறேன். படம் வரும்போது இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதில் கிடைக்கும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!