கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிய காரும் – லாரியும்… மேலாளர் உள்பட 4 பேர் நசுங்கி சாவு..!


திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே ஆலத்தூர் மேடு பகுதியில் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையின் உதவி மேலாளராக ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராயகிரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஜெய்கணேஷ் (வயது 34) என்பவர் பணியாற்றி வந்தார்.

அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாதாள புரத்தை சேர்ந்தவர்கள் தங்கபாண்டியன் (29), சங்கர் (24). திண்டுக்கல் மாவட்டம் சிலுவந்தளூர் அருகே உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்தவர் விஜயராகவன் (26), திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தாசப்பட்டி அருகே உள்ள கருங்கான்வலசுவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (26), அருப்புக்கோட்டைய சேர்ந்தவர் பாரதிதாசன் (26).

இவர்கள் 6 பேரும் நூற்பாலை விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து 1 மணி அளவில் ஜெய்கணேசும், கோவிந்தராஜும் சாப்பிடுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றனர். ஆனால் ஓட்டல் மூடிக்கிடந்ததால் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டிக்கு சென்று சாப்பிட முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுடன் தங்கபாண்டியன், பாரதிதாசன், விஜயராகவன், சங்கர் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து 6 பேரும் சேர்ந்து காரில் புஞ்சைபுளியம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். காரை ஜெய்கணேஷ் ஓட்டினார். இந்த கார் நள்ளிரவு 1.30 மணி அளவில் புஞ்சைபுளியம்பட்டி-திருப்பூர் சாலையில் பொன்மேடு என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே மைசூரில் இருந்து காப்பிக்கொட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று விருதுநகர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காருக்குள் இருந்தவர்கள் “அய்யோ, அம்மா” என்று அலறினர். இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஜெய்கணேஷ், சங்கர், தங்கபாண்டியன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி செத்தனர். விஜயராகவன், கோவிந்தராஜ், பாரதிதாசன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு ஓடோடி வந்தனர். உடனே இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி விஜயராகவன் நேற்று காலை இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

இந்த விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த ஜெய்கணேசுக்கு உஷா என்ற மனைவியும், ஹரிகரன் என்ற மகனும் உள்ளனர். தங்கபாண்டியனுக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. சங்கர், விஜயராகவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

புஞ்சைபுளியம்பட்டி அருகே நடந்த விபத்தில் ஒரே மில்லில் வேலை செய்த 4 பேர் இறந்த சம்பவம் சக தொழிலாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!