10 வருஷத்துக்கு முன் காணாமல் போன நர்ஸ்… கொலையாளி சிக்கியது எப்படி..?


10 வருஷத்துக்கு முன் காணாமல் போன நர்ஸ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும், அந்த கொலையை தம்பியும், தாய்மாமனும்தான் சேர்ந்து செய்தார்கள் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சண்முகம். இவர் ஒரு ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். மனைவி பெயர் ஜீவா. இவர்களது மூத்த மகள் சுதா, கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக பணிபுரிந்தார். வயசு 24.

கடந்த 2007ம் வருஷம் ராஜ்குமார் என்பவருடன் சுதாவுக்கு கல்யாணம் நடந்தது. தம்பி முறை உறவான யோகேஸ்வரன் என்ற 17 வயசு சிறுவன்தான் சுதாவை தினமும் வேலைக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுதா கடந்த 2009, செப்டம்பர் 29-ம் தேதி வேலைக்கு போனவர், வீடு திரும்பவே இல்லை.

ஆஸ்பத்திரிக்கு போன் செய்து கேட்டதற்கு, சுதா அன்றைய தினம் வேலைக்கு வரவே இல்லை என்றார்கள். இதனால் பல இடங்களில் சுதாவின் தாய்மாமன் ரெங்கராஜ் உட்பட குடும்பத்தினர் தேடினார்கள். எங்கு தேடியும் கிடைக்காததால், துறையூர் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சுதாவின் தம்பி யோகேஸ்வரன், தாய்மாமன் மீது சந்தேகம் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்திருந்தனர். ஆனால், ரெங்கராஜவும், யோகேஸ்வரனும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால், இந்த வழக்கும் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

இந்நிலையில், 2011ல் ராஜ்குமார் ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரும் 2வது கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டார். பின்னர், 2014ல், சிபிசிஐடி போலீசார் விசாரணை கோரி சுதாவின் அம்மா ஜீவா மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதுவும் அப்படியே நின்றுவிட்டது. தலைமறைவான 2 பேரும் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவும் முடியவில்லை.

இந்நிலையில்தான், சிபிசிஐடி விசாரணை கோரப்பட்ட வழக்கில் போன வாரம் விசாரணைக்கு வந்தபோது மதுரை ஐகோர்ட் கிளை போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தது. இதையடுத்து திருச்சி எஸ்பி ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில், விசாரணை ஆரம்பமானது. தலைமறைவாக உள்ள 2 பேரும், சென்னையில் தாம்பரத்தில் தங்கி உள்ள தாகவும், கால் டாக்சி ஓட்டுனர்களாகவும் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, தாய்மாமன் ரெங்கராஜ், தம்பி யோகேஸ்வரன் இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் சொன்னதாவது:

யோகேஸ்வரன் ஒரு பெண்ணை காதலித்து, அவர் கர்ப்பமாகி உள்ளார். காதலியின் கர்ப்பத்தை கலைக்க, சுதாவிடம் யோகேஸ்வரனும், ரெங்கராஜும் பணமோ, நகையோ கேட்டிருக்கிறார்கள். தன்னிடம் இல்லை என்று சுதா கூறவும், சம்பவ நாள் அன்று, வேலைக்குச் செல்ல நின்றிருந்த சுதாவை யோகேஸ்வரன் காரில் ஏற்றி கடத்தி சென்றார். அதில் ரெங்கராஜும் ஏறி கொண்டார்.

இருவரும் கொத்தம்பட்டி பாலம் அருகே உள்ள மண் சாலைக்குள் கடத்தி சென்று கழுத்தில் உள்ள நகைகளை கழட்டி தருமாறு மிரட்டி உள்ளனர். அப்போதும் சுதா தராததால், இருவரும் காருக்குள்ளேயே சுதாவின் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொன்று, 6 பவுன் தங்க வளையல்கள், 3 பவுன் செயின், மூக்குத்தி, மோதிரத்தை கழட்டி கொண்டுள்ளனர். இதில் ஒரு காது, மூக்கில் இருந்த நகையை கழட்ட முடியாமல் போனதால், பிளேடு எடுத்து அறுத்து நகையை பறித்து, வழியில் உள்ள புதருக்குள் வீசியதும் தெரிய வந்தது.

அது மட்டுமில்லை.. புதரில் வீசிய சுதா ஒருவேளை உயிருடன் இருக்கலாம் என்று நினைத்து, பாறாங்கல்லை தூக்கி முகத்தில் போட்டு சிதைத்ததாகவும், பாறாங்கல்லில் கைரேகை இருந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து, அதனை காருக்குள் எடுத்து வைத்து, கழுவி.. வீட்டு பக்கத்திலேயே வைத்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!