நள்ளிரவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட சரவணன்..!


பஸ்சில் பெண்களை உரசிய விவகாரத்தை எளிதில் மன்னிக்க முடியாது எனக்கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் திடீரென நீக்கம் செய்யப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுன் 23-ந்தேதி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். அதில் பாத்திமா பாபு, நடிகை வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா ஆகிய 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைசியாக ரேஷ்மா கடந்த ஞாயிறு அன்று வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் நடிகர் சரவணன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண்களை பற்றி கமல்ஹாசன் பேசி கொண்டிருந்த போது, தான் தனது கல்லூரி காலத்தில் பேருந்தில் பெண்களை உரசியதாக தெரிவித்தார். இதை கேட்டு அப்போது கமலும் சிரித்தார், அங்கு கூடியிருந்த மக்களும் சிரித்தனர். ஆனால், இந்த விவகாரம் பின்பு பெரிய சர்ச்சையாக வெடித்தது.

அது எப்படி பெண்களை பாலியல் ரீதியாக ஒருவர் துன்புறுத்தியதாக கூறியதை கேட்டு, கமல் உள்ளிட்ட அனைவரும் அமைதியாக போகலாம் என சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. விவகாரம் பெரிதாவதை உணர்ந்த பிக்பாஸ் உடனடியாக சரவணனை ஆலோசனை அறைக்கு அழைத்து மன்னிப்பு கேட்க வைத்தார். இதனால் அப்போதைக்கு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று அதிரடியாக சரவணனை மீண்டும் ஆலோசனை அறைக்கு அழைத்த பிக்பாஸ் இது தொடர்பாக அவரிடம் பேசினார். அப்போது, இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் மன்னிக்க முடியாது எனவும், உடனடியாக சரவணனை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் அனுப்புவதாகவும் பிக்பாஸ் தெரிவித்தார். இதை பார்த்துக்கொண்டு இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் தான் ரேஷ்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கடந்த வாரம் வெளியேற்றப்படுபவர் பட்டியலில் கூட சரவணன் பெயர் இல்லை. அப்படியிருக்கும்போது அவசர அவசரமாக இரவு நேரத்தில் சரவணனை வெளியேற்ற வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்தது. நேற்று யாருக்கும் தெரியாமல் சரவணன் பிக்பாசில் இருந்து வெளியேறிவிட்டார். இன்று தான் இதற்கு பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களின் மனநிலை என்ன என்பது தெரியும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!