தீர்ப்புக்கு எதிர்ப்பு ; நீதிபதியிடம் மேலாடையை கழட்டி மார்பகத்தை காட்டிய பெண்!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், முசேவேனி (வயது 74) அதிபராக உள்ளார். இவர் கருத்து சுதந்திரத்தை விரும்புவதில்லை. தன்னை விமர்சிப்பவர்களை ஒரு கை பார்த்து விடுவது வழக்கமாக உள்ளது.

அங்கு நியான்சி (44) என்ற பெண் ஆராய்ச்சியாளர் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிரான தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார். அதிபர் முசேவேனியின் சர்வாதிகாரப்போக்கையும் விமர்சித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் அதிபர் முசேவேனி அமிலம் ஊற்றி எரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருத்து வெளியிட்டிருந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீது அங்குள்ள கோர்ட்டில் விசாரணை நடந்தது. அப்போது அவர் காணொலி காட்சி மூலம் தோன்றி தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார். அவர், ‘‘நான் உங்கள் முன் சந்தேக நபராகவும், கைதியாகவும் நிற்பதே சர்வாதிகாரத்தின் பல அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது. மோசமான சர்வாதிகாரியை வெளியேற்றுவதற்கான போராட்டத்தில் வெறும் பார்வையாளராக இருக்க நான் மறுக்கிறேன்’’ என கூறினார். இதையும் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கின் தீர்ப்புக்காக அவர் காணொலி காட்சி வழியாக தோன்றினார். அப்போது அவருக்கு 18 மாத தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இதில் கொதித்தெழுந்த அவர் தீர்ப்பின் மீதான தனது எதிர்ப்பை காட்டும் விதமாக மேலாடையை அகற்றி தனது மார்பகங்களை காட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

நியான்சிக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.