காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க இதுவே சரியான நேரம்.. இம்ரான் கான் பகீர் டிவிட்.. என்ன திட்டமிடுகிறார்?

ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க இதுவே சரியாக தருணம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட் செய்துள்ளது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நிமிடத்திற்கு நிமிடம் காஷ்மீரில் பரபரப்பு கூடிக்கொண்டே செல்கிறது. அங்கு இந்திய ராணுவம் குவிக்கப்பட்டு, மொத்தமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி போய் உள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அங்கு 75 ஆயிரம் வீரர்கள் புதிதாக களமிறக்கப்பட்டு உள்ளனர். இனி வரும் நாட்களில் இன்னும் கூடுதலாக துணை ராணுவப்படை வீரர்கள் அங்கு களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சென்ற வாரம் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து இம்ரான் கான் டிவிட் செய்துள்ளார். அதில், காஷ்மீர் எல்லையில் அப்பாவி மக்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதேபோல் காஷ்மீரில் கொத்து குண்டுகளை மக்கள் மீது இந்திய ராணுவம் பயன்படுத்துவதும் சட்டத்திற்கு எதிரானது, சர்வதேச ஆயுத சட்டம் 1983க்கு எதிரான நடவடிக்கை இது. சர்வதேச அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த செயலை ஐக்கிய நாடுகள் சபை கவனத்தில் கொள்ள வேண்டும் .

காஷ்மீரில் பல நாட்களாக கஷ்டப்படும் மக்களின் துன்பத்தை போக்க இதுவே சரியான தருணம். ஐநா ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் மக்கள் சுயமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும். தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பு நீடிக்க வேண்டும் என்றால், முறையாக பேச்சுவார்த்தை ஒப்பந்தம் மூலம் மட்டுமே செய்ய முடியும்.

காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவுவதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார். இதுதான் அதற்கு சரியான நேரம். காஷ்மீரில் நிலைமை மோசமாகி வருகிறது. அங்கு இந்திய ராணுவம் அத்து மீறி வருகிறது, இது அங்கு பெரிய பிரச்னையை உருவாக்க வாய்ப்பாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் இம்ரான் கான் காஷ்மீர் மக்களின் துன்பத்தை போக்க இதுவே சரியான தருணம் என்று கூறியதும், தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பு நீடிக்க வேண்டும் என்றும் கூறியதும் இந்தியாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கத்தான் என்று கூறுகிறார்கள். காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் வேறு ஏதாவது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது, அதனால்தான் இப்படி இம்ரான் பேசியுள்ளார், என்று கூறப்படுகிறது.- Source: oneindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.