ஒட்டிப்பிறந்த இரட்டையரைப் பிரிக்க 30 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை..!


வங்கதேச தலைநகர் டாக்காவில் 2 தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு பல கட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இரு குழந்தைகளையும் மருத்துவர்கள் வெற்றிகரமாக பிரித்தெடுத்தனர்.

வங்கதேசம் டாக்காவில் ரபிகுல் இஸ்லாம் என்பவருக்கு 3 வருடங்களுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். இரண்டு குழந்தைகள் ஒரே சமயத்தில் பிறந்த சந்தோஷத்தை தந்தை ரபிகுல் இஸ்லாம் நீண்ட நேரம் அனுபவிக்க முடியவில்லை. காரணம் 2 பெண் குழந்தைகளின் தலையும் ஒட்டிப்பிறந்ததுதான்.
இதனால் மனவேதனையுடன் குழந்தைகளை வளர்த்து வந்த நிலையில் 2 குழந்தைகளையும் பிரித்தெடுக்க எண்ணிய தந்தை டாக்காவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தார்.

வழக்கமாக இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்யும்போது மீண்டும் 2 குழந்தைகளும் உயிர் பிழைக்க 50 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தபோதும் மனதை பாராமாக்கிக்கொண்டு தன்னுடைய 2 மகள்களான ரபேயா மற்றும் ருகாய ஆகியோரை தனித்தனியாக பிரித்தெடுக்க சம்மதித்தார் தந்தை ரபிகுல் இஸ்லாம்.

இந்த அறுவை சிகிச்சையை சவாலாக ஏற்றுக்கொண்ட ஹங்கேரிய மருத்துவர்கள் 35 பேர் கொண்ட குழு குழந்தைகளுக்கு 2017 முதல் அனைத்து பரிசோதனைகள், பல கட்ட அறுவை சிகிச்சைகள் செய்து இருவரையும் பிரித்து சாதனை புரிந்துள்ளனர்.

2017ல் இரு குழந்தைகளுக்கு 14 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூளையில் இணைந்துள்ள இரத்த நாளங்களை பிரித்தெடுத்தனர். அடுத்த 6 மாதத்தில் உச்சந்தலை மற்றும் மென்மையான திசுக்களை விரிவாக்குவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2 குழந்தைகளை பிரித்தெடுக்க 40க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இறுதிக்கட்டமாக கடந்த வியாழனன்று தொடங்கிய அறுவை சிகிச்சை 30 மணிநேரத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு 2 குழந்தைகளும் பத்திரமாக பிரிக்கப்பட்டு இருவரின் மண்டை ஓடுகளிலும் மென்மையான திசுக்களால் மூடப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றியடைந்து 2 குழந்தைகளும் காப்பாற்றப்பட்டதால் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையின்றி கண்ணீர்மல்க மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார் 2 குழந்தைகளுக்கு தந்தை.

மேலும் குழந்தைகளின் தந்தை ஏழை என்பதால் மருத்துவ செலவுகளை ஹங்கேரிய தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டது. இந்த தொண்டு நிறுவனம் 2002ல் வெளிநாட்டு ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி செய்ய ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 6 மில்லியன் குழந்தைகளில் ஒரு குழந்தை இதுபோன்ற எம்பிராலஜிகல் எனும் கருநோய் பாதிப்பு ஏற்பட்டு பிறக்கிறது என்பது கூடுதல் தகவல்.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!