குடும்பம் நடத்த வா இல்ல சுட்டுத்தள்ளிடுவேன்… 2-வது மனைவிக்கு கணவன் வாட்ஸ்-அப்பில் மிரட்டல்..!


2-வது மனைவி குடும்பம் நடத்த வராததால் துப்பாக்கியை காட்டி வாட்ஸ்-அப்பில் மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

துப்பாக்கியை காட்டி மிரட்டும் வீடியோ

வேலூர் மாவட்ட மக்களின் வாட்ஸ்-அப்பில் சில நாட்களாக துப்பாக்கி வைத்துக்கொண்டு ஒருவர் மிரட்டல் விடும் காட்சி வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் பேசும் நபர் துப்பாக்கியை காட்டி ‘நான் பேச மாட்டேன். இந்த துப்பாக்கி தான் பேசும். நேரில் பார்த்தா, உடனே சுட்டுத்தள்ளிடுவேன். பொம்மை துப்பாக்கி என்று நினைத்தாயா?, பார்த்துக்கோ செத்திடுவே என்று அசிங்கமான வார்த்தைகளை கூறி மிரட்டல் விடுக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. தொடர்ந்து அந்த வீடியோவில் பேசும் பெண், ‘என்னுடைய பெயர் மலர். தற்போது சிங்கப்பூரில் வேலை செய்கிறேன்.

எனது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. எனது முதல் கணவர் மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது. மலேசியாவில் வேலை செய்தபோது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தேன். அப்போதுதான் வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் கபாலீஸ்வரனை 2-வது திருமணம் செய்து கொண்டேன். அவர் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். எனவே அவருடன் வாழப்பிடிக்காமல் பிரிந்து விட்டேன். ஆனால் கபாலீஸ்வரன் எனக்கும், எனது மகளுக்கும் பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வருகிறார். அவர் துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவதாக மிரட்டும் வீடியோவை அனுப்பி உள்ளார். அவரிடம் இருந்து என்னை காப்பாற்றும்படி உதவிகேட்டு இதனை வெளியிடுகிறேன்’ என்று கூறுவதுபோல வீடியோ முடிகிறது.

போலீசார் தீவிர விசாரணை

இந்த வீடியோ குறித்து ஆய்வு வேலூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுக்கும் நபர் வேலூர் பிஷப் டேவிட்நகரை சேர்ந்த கபாலி என்ற கபாலீஸ்வரன் (வயது 45) என்று தெரிய வந்தது.நேற்று முன்தினம் இரவு கபாலியின் வீட்டுக்கு சென்று அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது கபாலி துப்பாக்கியை காட்டி போலீசாருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் மடக்கி பிடித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில், கபாலியின் முதல் மனைவி இறந்தநிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் மலர் அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து முகநூலில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக இருவரும் 2-வதாக திருமணம் செய்து கொண்டனர். நாளடைவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, மலர் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனாலும் கபாலி துப்பாக்கியை காட்டி மிரட்டி வீடியோ எடுத்து மலரின் வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பியதும், மேலும் அவர் ராணிப்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

அதையடுத்து வேலூர் தெற்கு போலீசார் கபாலி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து பொம்மை துப்பாக்கி, 2 கத்தி, 6 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!