ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு – ராஜகோபால் தவிர 9 பேர் சரண்..!


கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் சரண் அடைய அவகாசம் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை சுப்ரீம் கோர்டில் விசாரணைக்கு வருகிறது.

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் (71). இவர் தனது ஓட்டலில் பணிபுரிந்த ஊழியரின் மகள் ஜீவஜோதியை 3-வது மனைவியாக்க விரும்பினார்.

இதனால் அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக வழக்கு பதிவானது. இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த 2004-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொலை குற்றத்தை கருத்தில் கொள்ளாமல் கீழ் கோர்ட்டு குறைந்த தண்டனை வழங்கி இருக்கிறது. இது மன்னிக்க முடியாத குற்றம். எனவே ராஜகோபால் மற்றும் பட்டுராஜன், ஜனார்த்தன், டேனியல், தமிழ் செல்வன், கார்மேகம் ஆகிய 6 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

அத்துடன் ஜூலை 7-ந்தேதிக்குள் பூந்தமல்லி கோர்ட்டில் சரண் அடைந்து ஜெயில் தண்டனையை அனுபவிக்க செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன் படி நேற்று அவர் சரண் அடைந்து இருக்க வேண்டும். நேற்று விடுமுறை நாள் என்பதாலும், உடல் நிலை சரியில்லாததாலும் சரண் அடையவில்லை.

இன்று (திங்கள்) சரண் அடைவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே சரண் அடைவதற்கு அவகாசம் கோரி ராஜகோபால் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் நாளைக்கு விசாரணைக்கு எடுப்பதாக கூறினர். அப்போது ராஜகோபால் சார்பில் ஆஜரான வக்கீல்கள், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நாளைய உத்தரவுக்கு பின்னர் ராஜகோபால் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் முடிவு செய்வார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!