தள்ளாடியபடி திடீரென நடுங்கும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா.. சர்வதேச உளவு அமைப்புகள் உஷார்!


ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மருத்துவ கோப்புகளை பெற வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் துடியாய் துடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண் அதிபரான ஏஞ்சலா, கடந்த சில வாரங்களில் இரண்டு முறை பொது வெளியில், தனது கட்டுப்பாட்டை இழந்து தள்ளாடினார். இது விவாதப் பொருளாக மாறியது.

ஜூன் 18ம் தேதி உக்ரேனிய அதிபர், வோலோடிமைர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பின் போது ஏஞ்சலா மெர்க்கல் தடுமாற்றமடைந்தார். நீர்ச்சத்து குறைபாடால் (ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டபோது சொன்ன காரணம்) அவர் நடுக்கமடைவதாக கூறப்பட்டது. ஒரு சில கப் தண்ணீரைக் குடித்தபின் மீண்டும் அவர் தெம்பானார்.

ஆனால் ஜி 20 உச்சிமாநாட்டிற்காக ஜப்பான் சென்றிருந்தபோது, ஜூன் 27 அன்று மீண்டும் ஏஞ்சலா மெர்க்கலுக்கு உடலில் நடுக்கம் ஏற்பட்டது. கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நடுக்கத்தை அவர் குறைத்ததை மீடியாக்கள் கவனித்தன. இதையடுத்து நடந்த செய்தியாளர் கூட்டத்தில், நிருபர்களிடம், “மன அழுத்தத்தால்” சற்று நடுக்கம் ஏற்பட்டது என்றும், அது “தோன்றியதைப் போலவே மறைந்துவிடும்” என்றும் ஏஞ்சலா மெர்க்கல் விளக்கம் அளித்தார். ஆனால், இந்த உடல் நடுக்கம் பற்றி தகவல் தெரிவித்து, மருத்துவ உதவியை நாடினாரா என்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்தார் அவர்.


இதையடுத்து, கடந்த ஜூன் 30 அன்று, பிரிட்டிஷ் செய்தித்தாள் ‘தி சண்டே டைம்ஸ்’, ஏஞ்சலா மெர்க்கல் மருத்துவ நிலையைக் கண்டுபிடிப்பதில் வெளிநாட்டு உளவாளிகள் ஆர்வம் காட்டுவதாகக் கூறி ஒரு செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஜெர்மன் அதிபர் நரம்பியல் பிரச்சினையால் பாதிக்கப்படுவதாக ஒரு மேற்கத்திய புலனாய்வு அமைப்பு நம்புகிறது”, என்று அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது. ஜூன் 28 அன்று, ஜெர்மனி பத்திரிக்கையான பில்ட், ஏஞ்சலா மெர்க்கலின் தனிப்பட்ட மருத்துவக் கோப்பை பெற, முயற்சிக்கும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பிற நாட்டு அரசுகள், ஏஞ்சலா மெர்க்கல் உடல்நிலை குறித்து பலத்த சந்தேகத்தோடு இருப்பதாகவும், ஊடகங்களுடன் வெளிப்படையாக பேச ஏஞ்சலா மெர்க்கல் மறுத்துவருவதை அந்த அரசுகள் கவனித்துள்ளன என்றும் பில்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், ஏஞ்சலா மெர்க்கல் உடல்நலம் பற்றிய மருத்துவ குறிப்புகள், ஜெர்மனியில் எங்காவது “ராணுவ பாதுகாப்பில்” வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்தக் கட்டுரை மேலும் கூறியுள்ளது. அக்டோபர் 2018 இல், ஜெர்மன் அதிபரானார், ஏஞ்சலா மெர்க்கல். அவர் பதவிக்காலம் 2021 இல் முடிவடைகிறது. அதுவரை இந்த பதவியை ஏஞ்சலா மெர்க்கல் திறம்பட கையாள முடியுமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!