செய்யாத குற்றத்திற்காக சிறைக்குபோன ஆசிரியை – 3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை..!


அசாம் மாநிலத்தில் கோல்கஜார் பகுதியை சேர்ந்தவர் மதுபாலா மண்டல். இவர் ஓய்வுபெற்ற ஆசிரியை ஆவார்.

கோல்கஜார் பகுதியில் உள்ள காவல் முகாமால் கடந்த 2016-ம் ஆண்டு மதுபாலா கைது செய்யப்பட்டார். இந்திய குடியுரிமை இல்லாமல் அவர் இந்தியாவில் வசித்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்.

ஆனால் அவர் தவறுதலாக கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது வெளிநாட்டினர் தீர்ப்பாயம் மூலம் தெரிய வந்ததை அடுத்து 3 ஆண்டு சிறைக்கு பின் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். அசாம் காவல்துறைக்கு பெரும் தலைகுனிவாக அமைந்துவிட்ட இந்த வழக்கில் அவர்களது அலட்சியமே ஒரு அப்பாவி பெண்மணியின் 3 ஆண்டு சிறைவாசத்துக்கு காரணமானது நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபாலா தவறுதலாக கைது செய்யப்பட்ட சம்பவம் பற்றி காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு மதுமாலா தாஸ் என்பவர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக தகவல் வந்தது. அவரை கைது செய்ய உத்தரவிட்டோம். மதுபாலா மண்டலின் முதல் கணவரின் பெயர் தாஸ் என்று முடியும். அதன் பின்னர் தான் மண்டலை திருமணம் செய்துள்ளார்.

எனவே பெயர் குழப்பத்தில் மதுபாலா மண்டலை கைது செய்து போலீஸ் முகாமில் அடைத்துவிட்டனர். இந்த விசாரணையின் போது தான் அந்த கிராமத்தில் மதுபாலா என்ற பெயரில் 3 பெண்கள் இருப்பதும் இந்த கைது உத்தரவுக்கு முன்பே குற்றவாளியான மதுபாலா தாசும் அவரது கணவர் மக்கன் நாமா தாஸ் இருவரும் இறந்து விட்டதும் தெரிய வந்தது.

வெளிநாட்டினர் தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணையின் முடிவில் தான் இந்த பெயர் குழப்பம் தெரிய வந்தது. இது முழுக்க முழுக்க விசாரணை அதிகாரியின் தவறுதலால் நிகழ்ந்தது என்று கூறி இருக்கின்றனர்.

ஆனால் மதுபாலாவை தவறுதலாக கைது செய்து அவரது 3 ஆண்டு சிறைக்கு காரணமான அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களா என்று கேட்டதற்கு காவல் துறை அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இது அந்த மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபாலா மண்டல் தனது பெயரை நிரூபிக்க பான்கார்டை பயன்படுத்தி வழக்கில் விடுதலை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!