பெண் கொலையில் திடீர் திருப்பம்: நகைக்காக கொலை நடந்ததுபோல் நாடகமாடிய மின் ஊழியர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலகொற்கை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 50). இவர் கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வசந்தி(35). இவர்களுக்கு சந்தோஷ்(18) என்ற மகனும், சந்தியா(14) என்ற மகளும் உள்ளனர். சந்தோஷ், கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சந்தியா, மேலகொற்கை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.

சந்தியாவின் பாட்டி வீடு அதே பகுதியில் உள்ளது. சந்தியா பெரும்பாலும் தனது பாட்டி வீட்டில் இருப்பது வழக்கம். கடந்த 17–ந் தேதி சந்தியா பள்ளிக்கு சென்று விட்டு வழக்கம்போல தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் சந்தியா தனது வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவருடைய தாய் வசந்தி உடல் முழுவதும் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவருடைய வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு நகைகள் மாயமாகி இருந்தன.

இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் முருகவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. நகைக்காக வசந்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வசந்தி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவருடைய வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் அவருடைய உறவினர் பாலமுருகன்(35) என்பவர், தான் வசந்தியை கொலை செய்ததாக கூறி கிராம நிர்வாக அதிகாரி தனலட்சுமியிடம் நேற்று சரண் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தாலுகா போலீசார் பாலமுருகனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், மாங்காய் மாயமானதால் ஏற்பட்ட தகராறில் வசந்தி இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டதும், நகைக்காக இந்த கொலை நடந்ததுபோல் பாலமுருகன் நாடகமாடியதும் தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து போலீசார் கூறியதாவது:–

வசந்தியின் கணவர் பாண்டியனின் சித்தப்பா பாலகிருஷ்ணனின் மகன் பாலமுருகன். இருவருடைய வீடும் அருகருகே உள்ளது. பாலமுருகன் மின்வாரிய ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். உறவினர்களான பாலமுருகனுக்கும், வசந்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வசந்தியின் வீட்டுக்கு பின்புறம் உள்ள மாமரத்தில் காய்த்த மாங்காய்கள் மாயமாகி இருந்தன. இதை பார்த்த வசந்தி, பாலமுருகன் தான், மாங்காய்களை பறித்து விட்டதாக கூறி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் வசந்தியை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்துள்ளார்.

பின்னர், தான் கொலைக்கு பயன்படுத்திய கம்பியை அங்கு குழிதோண்டி புதைத்து விட்டு, தன்மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக வசந்தியின் வீட்டில் உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 13 பவுன் நகைகளை திருடி சென்று மறைவான இடத்தில் குழிதோண்டி புதைத்துள்ளார். இதன் மூலம் நகைக்காக வசந்தி கொலை செய்யப்பட்டதாக வழக்கை திசை திருப்ப பாலமுருகன் முயன்றுள்ளார்.

வழக்கு குறித்த விசாரணை தீவிரமடைந்ததும் கிராம நிர்வாக அதிகாரியிடம் அவர் சரண் அடைந்து விட்டார். அவரை தற்போது கைது செய்துள்ளோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

பாலமுருகனால் புதைக்கப்பட்ட நகைகள் மற்றும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கம்பியை போலீசார் கைப்பற்றினர்.- Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.